சூ. 102 : | எல்லா எழுத்தும் வெளிப்படக் கிளந்து |
| சொல்லிய பள்ளி எழுதரு வளியின் |
| பிறப்பொடு விடுவழி உறழ்ச்சி வாரத்து |
| அகத்தெழு வளியிசை அரில்தப நாடி |
| அளபிற் கோடல் அந்தணர் மறைத்தே |
| அஃதிவண் நுவலாது எழுந்து புறத்திசைக்கும் |
| மெய்தெரி வளியிசை அளபுநுவன் றிசினே |
(20) |
க-து: | உந்திமுதலாத் தோன்றி உறழ்ந்தெழும் எழுத்துக்களுள் மந்திர நூலோர் கொள்ளும் மாத்திரை மரபு வேறு உண்டு. அஃது ஈண்டைக்கு வேண்டாமையான் செவிப்புலனாகப் பொருள் உணர்த்தும் எழுத்துக்களுக்கே ஈண்டு அளபு கூறப்பட்ட தென்கின்றது. |
பொருள்: சொல்லிய பள்ளி வளியின் எழுதரும் எல்லா எழுத்தும் = மூவகையாய இடங்களினிடமாக நின்று ஓசைக் காற்றினான் எழும் எனப்பெற்ற எல்லா எழுத்துக்களையும் கிளந்து, பிறப்பொடு விடுவழி=ஐவகை உறுப்புக்களினிடமாகக் கிளந்து அவ்வவற்றின் பிறப்பியல்புகளோடு செவிப்புலனாக வெளிப்படுத்துமிடத்து, அகத்தெழு வளியிசை உறழ்ச்சி வாரத்து=உந்தியினிடமாக அகத்தெழும் வளியிசை ஒன்றற் கொன்று முரண்பட்டு வருதலை, அரில்தபநாடி=குற்றமற ஆராய்ந்து, அளபிற்கோடல் அந்தணர் மறைத்தே = மாத்திரையான் அளவிட்டு மேற்கோடல் நிறைமொழி மாந்தராகிய அந்தணரது மந்திரநூலின் கண்ணதாகும். அஃது இவண் நுவலாது = அம்மாத்திரையளவினை (இயற்றமிழ் எழுத்துக்களுக்கு இலக்கணங் கூறும்) இந்நூலகத்துக்கூறாமல், எழுந்து புறத்திசைக்கும் மெய்தெரி வளியிசை அளபு நுவன்றிசினே = புறத்தே செவிப்புலனாக எழுந்து தன் உருவந்தோன்ற இசைக்கும் எழுத்தோசைகளின் அளவைகளையே யான் கூறியுள்ளேன். |
‘‘மறைத்தே’’ என்னும் ஏகாரம் தேற்றம். “இசினே’’ என்னும் ஏகாரம் ஈற்றசை. “மெய்தெரி வளியிசை யளபே’’ என்னும் தேற்றேகாரம் தொக்கது. மெய்=வடிவம். அகத்தெழுவளியிசை=நாததத்துவமாக எழுந்து மூலாதாரமுதல் ஆஞ்ஞை யீறாக அகத்தே திரிதரும் ஓசைக்காற்று. மறை = தமிழ்நான்மறை, ஈண்டு அஃது மந்திரமறைநூலை உணர்த்த நின்றது. அந்தணர் = நிறைமொழி மாந்தராகிய நீத்தார். |
அறம் முதலிய நாற்பொருள்களின் நுட்பங்களைக் கூறும் தமிழ்மறையினை நவிலும் அந்தணர்தாம் யோகநிலையில் அமர்ந்து மன்பதை உய்யும் பொருட்டு மூலாதாரத்தினின்று எழும் நாதத்தை உதானனென்னும் காற்றான் உந்தி, ஆறு ஆதாரங்களிலும் ஏற்றி அவ்வவ் இடங்களில் உள்ள ஆற்றல்களை அட்சர உருவான் அசபையாக உருவேற்றுவர். அங்ஙனம் உருவேற்றப்பெறும் மந்திரஒலிகள் இடத்திற்கேற்ப அளவை வேறுபடுமென்பர். அவைதாமும் அவர்தம் அகச் செவிக்கே புலனாம் என்ப. அஃது ஈண்டு வேண்டப்படாமையின் ‘‘அஃதிவண்நுவலாது’’ என்றார். |
இதனான் மந்திர எழுத்துக்களும் அவற்றின் ஓசையமைதிகளும், அவற்றிற்கு அளவுகளும் மாத்திரையும் உண்டென்பதை ஓராற்றான் உணர்த்தினார் பல்புகழ் நிறுத்த படிமையோராதலின். |
மந்திரநூலை மறை என்பதும், நீத்தாரை நிறைமொழி மாந்தர் என்பதும், அந்தணர் என்பதும், ‘‘நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த மறைமொழி தானே மந்திர மென்ப’’ (செய்யு - 171) என்பதனானும். “மந்திரப் பொருள்வயின் ஆஅ குநவும்” (சொல்-450) என்பதனானும் “அந்தணர் என்போர் அறவோர் மற்றெவ் வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுக லான்” (குறள்-40) என்பதனானும் அறிக. |
அந்தணர் மறை என்பதற்கு இருக்கு முதலாய பார்ப்பாரது வேதம் எனப்பொருள் கூறுவர் உரையாசிரியன்மார். ஆண்டு சூக்குமை முதலாக அகத்தெழும் தன்மைகளையன்றி மாத்திரையளவு பற்றிக் கூறப்படாமையின் அது பொருந்தாதென்க. |
இனி இச்சூத்திரத்தான் ஓசையின்றி வடிவு கொள்ளும் பதினெண்மெய்யெழுத்துக்கள் எழுதருவளியின் உந்துதலான் ஒலிப்பினைப்பெறும் என்பதும் ஆண்டு அவை புள்ளியென வழங்கப்பெறும் என்பதும் அங்ஙனம் ஒலிக்கும் மெய்தெரிவளியிசை கட்கே நூன்மரபின்கண் அளவு கூறப்பட்டதென்பதும் புலனாம். |
பிறப்பியல் முற்றியது. |