4. புணரியல்
 

மொழிமரபிற்  கூறப்பெற்ற  இலக்கண  முறைமையான்  ஆக்கம் பெற்ற
மூவகை  மொழிகளும்,  பெயர்ச்சொல்லும்  தொழிற்சொல்லுமாக ஒன்றொடு
ஒன்று தொடருங்கால்,  அவற்றின்  இறுதியும் முதலும்  இடையறவுபடாமல்
இயையும் நிலையே புணர்ச்சியாம்.
 

அவை,   பட்டாங்கு    புணர்தலும்    திரிபுற்றுப்    புணர்தலுமாகிய
இருநிலைமைகளை    எய்தும்.   திரிதல்   ஒருசொல்லின்  ஈற்றெழுத்தும்
முதலெழுத்துமேயன்றி   இடைநின்றனவும்  திரியும்.  ஒரோவழி  அச்சொல்
முழுதும் திரிதலுமுண்டு. பிறிதோர் எழுத்தையோ   சொல்லையோ துணைக்
கொள்ளுதலும் உண்டு. அங்ஙனம் திரிதற்குக்   காரணம்   எழுத்துக்களின்
பிறப்பிட  வேறுபாடேயாகலின்  பிறப்பியலின்  பின்  புணரியல்  வைக்கப்
பெற்றது. புணர்ச்சியை ஆசிரியர் இயற்கை, தொழில்,இயல்பு, பண்பு முதலிய
சொற்களானும் குறிப்பிடுவார்.
 

மெய்யையும்  உயிரையும்,  ஈறும்  முதலுமாகக்  கொண்டு    சொற்கள்
புணரும்நிலை   மிகப்   பரப்புடையதாகலின்  அவ்  இலக்கணத்தை ஆறு
இயல்களாகப் பகுத்துக் கொண்டு ஓதுகின்றார். அவற்றுள்,   முதலாவதாகிய
இப்புணரியல்  ஏனைய  ஐந்தற்கும்  பொதுவாகும்.  இதன்கண்  ஆசிரியர்,
புணர்ச்சி என்பதன்   பொதுவிலக்கணத்தையும்  நால்வகைச்  சொற்களுள்,
தத்தம் பொருளவாய்நிகழும் இடைச் சொற்களும், உரிச்சொற்களும் பெயரும்
வினையுமாக அடங்கலின் அவற்றைப் பெயர் வினைகளுள் அடக்கி, அவை
புணரும்  நிலைமைகளையும்,   வேற்றுமைப் பொருள்வயின்  உருபாகுவன
இடைச் சொற்களே யாதலின் அவை புணரும்  இயல்பினையும்,   சொற்கள்
அல்வழியும் வேற்றுமை வழியுமாகத்  தொடர்வதனான் அல்வழி வேற்றுமை
பற்றிய மரபுகளையும், பொருள் நிலைக்கு  உதவுவனவாயும்  சொல்நிலைக்கு
உதவுவனவாயும்   துணைவரும்   சாரியை  இடைச்  சொற்களின்  பெயர்,
தொகையொடு,   அவற்றின்   இயல்புகளையும்   பொதுவான    புணர்ச்சி
மரபுகளையும்   விளங்கக்   கூறுகின்றார்.  அதனான்  இவ்வியல்புணரியல்
என்னும் பெயர்த்தாயிற்று.
 

சூ. 103 :

மூன்று தலையிட்ட முப்பதிற் றெழுத்தின்

இரண்டு தலையிட்ட முதலா கிருபஃது

அறுநான் கீற்றொடு நெறிநின் றியலும்

எல்லா மொழிக்கும் இறுதியும் முதலும்

மெய்யே உயிரென்று ஆயீ ரியல

(1)
 

க-து:

மொழிமரபினுள்   விரித்தோதப்பெற்ற    மொழி     முதனிலை
இறுதிநிலை  எழுத்துக்களைத்  தொகுத்து  அவை புணர்ச்சிக்குக்
கருவியாமாறு கூறுகின்றது.
 

பொருள்:நூன்மரபினுட்  கூறப்பெற்ற முப்பத்து மூன்று எழுத்துக்களுள்
இருபத்திரண்டு    எழுத்துக்களை    முதலாகவும்,   இருபத்து    நான்கு
எழுத்துக்களை   ஈறாகவும்   கொண்டு    நெறியாக   இயங்கும்   எல்லா
மொழிகட்கும்,     இறுதியும்      முதலுமாக   நிற்கும்     எழுத்துக்கள்
(தொகுத்துநோக்கின்)     மெய்யும்    உயிரும்   என்று   சொல்லப்பட்ட
அவ்இரண்டு இலக்கணத்தனவாகும்.
 

எழுத்துவகையான் இருபத்திரண்டும் இருபத்து நான்கும் என நின்றவை
இனக்குறியீட்டு   வகையான்  இரண்டாக  நிற்கும்  என்றவாறு. முதலாகும்
இருபத்திரண்டாவன:  உயிர்  பன்னிரண்டு, மெய் ஒன்பது,  மொழி  முதற்
குற்றுகரம் ஒன்றுமாம். ஈறாகும் இருபத்து நான்காவன: உயிர்  பன்னிரண்டு,
மெய் பதினொன்று, மொழியிறுதிக் குற்றியலுகரம் ஒன்றுமாம். முதனிலையும்
இறுதி நிலையும்   நோக்கி   மெய்யெனப்   பொதுப்படக் கூறினாராயினும்
‘‘அப்பதி   னொன்றே   புள்ளி   யிறுதி’’   எனவும்,  “மெய்யீ றெல்லாம்
புள்ளியொடு நிலையல்’’ எனவும்,  ‘‘உயிர்மெய்  யல்லன மொழிமுத லாகா’’
எனவும் கூறுதலான். இறுதி  நிற்பது  புள்ளிமெய்  என்றும், முதல் நிற்பது
உயிர்மெய் என்றும் உணர்ந்துகொள்க.
 

மொழி   முதற்  குற்றியலுகரம்   நகரமெய்யை ஊர்ந்து நின்ற தாயினும்
அக்குற்றியலுகரத்தை    முதலாகக்   கொள்ளுதல்  மரபாகலின், ‘‘நெறிநின்
றியலும்’’ என்றார். ‘‘மூன்று தலையிட்ட.....இயலும்’’ என்னும் தொடர்; மொழி
என்பதற்கு  அடையாய்   அதன்  பகுதிகளை  விளக்கி நின்றது. ‘‘ஈரியல’’
என்றது  குறிப்பு  வினைப்பயனிலை.  ஏகாதசம்,  துவாதசம் என்னும் மரபு
ஆரியத்திற்கேயன்றித் தமிழிற்கும்  உரியதே  என்பதை  உணர்த்த  மூன்று
தலையிட்ட, இரண்டு தலையிட்ட எனக் கூறினார்.
 

நிறுத்தசொல்லை  நோக்கி   எதிர்ப்படும்     சொல்லைக்    ‘குறித்து
வருகிளவி’    என்பவாதலான்    புணர்ச்சி   என்பது  நிறுத்த சொல்லை
வைத்தே கூறப்படும் என்பது   விளங்க,   முதலும்   இறுதியும்  என்னாது
இறுதியும்    முதலும்    என்றார்.   புணர்ச்சிக்கண்     நிகழும்    திரிபு
வேறுபாடுகள்   உயிரெழுத்தினும்   மெய்யெழுத்துக்கள்   மாட்டு   மிக்கு
நிகழ்தலான் “மெய்யே உயிரென் றாயீ ரியல’’ என்றார்.
 

எ-டு:  கடல்  -  மெய்ம்முதல்    மெய்யீறு.   அலை  -  உயிர்முதல்
உயிரீறு;  இராஅ என்பதும்  அது. மணி - மெய்ம்முதல்  உயிரீறு;  நிலாஅ
என்பதும்   அது.  எழில் - உயிர்   முதல்   மெய்யீறு.   நுந்தை என்பது
மொழி  முதற்   குற்றியலுகரம்.   இதனை   இதழ் குவித்து முற்றுகரமாகக்
கூறின் மெய்ம்முதல் உயிர் ஈறாகும்.