அவற்றுள்
மெய்யீ றெல்லாம் புள்ளியொடு நிலையல்
க-து:
பொருள்: “மெய்யே உயிரென் றாயீ ரியல’’ என்றவற்றுள் ஈற்றின்கண்நிற்கும் எல்லா மெய்களும் ஒலிப்புடைய புள்ளி மெய்யாக நிற்கும்.
மொழிமரபின்கண் மெய்யெழுத்துக்கள் மொழிமுதற்கண் உயிர்மெய்யாகவன்றிப் புள்ளிமெய்யாக நில்லா என நியமித்தமையான் ஈற்றில் நிற்கும்மெய், புள்ளியொடு நிற்குமென ஈண்டுக் கூறப்பட்டது. ‘‘எல்லாம்’’என்றதனான் இடை நிற்பனவும் புள்ளியொடு நிற்குமெனக் கொள்க.
எ-டு: உரிஞ், அரண், வெரிந், மரம், அலவன், வாய், சுடர், கடல்,தெவ், புகழ், உதள் எனவரும்.