சூ. 105 :குற்றிய லுகரமும் அற்றென மொழிப
(3)
 

க-து:

குற்றியலுகரத்தை மெய்யொடு மாட்டெறிந்து கூறுகின்றது.
 

பொருள்:சார்பெழுத்து மூன்றனுள்   மொழி   ஈற்றுக் குற்றியலுகரமும்
மேற்கூறிய  மெய்களின்  தன்மைத்தாகும்  என்றது:  புள்ளியொடு  நிற்கும்
என்றவாறு.
 

குற்றியலிகரமும்    ஆய்தமும்   மொழியிறுதிக்கண்    நில்லாமையின்
குற்றியலுகரத்தை    விதந்தோதினார்.    ‘மெய்யீ றெல்லாம்’    எனக்கூறி
மாட்டெறிந்தமையின்   ஈற்றுக்    குற்றியலுகரம்   என்பது  பெறப்பட்டது.
இதன்பயன் ‘புள்ளி யீற்றுமுன்’ என்னும் சூத்திரத்தான் இனிது விளங்கும்.
 

இனி,   இவ்இரண்டு  சூத்திரங்களானும்  கூறப்பெற்ற  விதிகள் மேலே,
‘‘மெய்யின் இயற்கை புள்ளியொடு நிலையல்’’, ‘‘இகர   உகரத்   தியற்கையு
மற்றே’’ என்பவற்றான் பெறப்படுமால் எனின்?  ஆண்டுக்கூறியது மெய்யும்,
குற்றியலிகரமும், குற்றியலுகரமும் அரை மாத்திரை பெற்று  ஒலிக்கும்  என
அவற்றின் இலக்கணங் கூறப்பட்டது.ஈண்டுப் புணர்மொழிக்கண் நிலைமொழி
ஈறாக  நிற்குமிடத்துக்  குறித்து   வருகிளவி   உயிர்முதன்  மொழியாயின்
புள்ளியியல்பாகிய மாத்திரையை இழந்து உயிரேற இடந்தந்தும் மெய்ம்முதல்
மொழியாயின் இழவாமலும் நிற்குமென  மேற்கூறும்   ‘‘புள்ளி   யீற்றுமுன்
உயிர்தனித்   தியலாது   மெய்யொடும்   சிவணும்  அவ்வியல் கெடுத்தே’’
என்னும்   விதிக்குக்   கருவியாகக்   கூறப்பெற்றமையான்       கூறியது
கூறலாகாமையறிக.