சூ. 107 :

உயிரிறு சொன்முன் உயிர்வரு வழியும்

உயிரிறு சொன்முன் மெய்வரு வழியும்

மெய்யிறு சொன்முன் உயிர்வரு வழியும்

மெய்யிறு சொன்முன் மெய்வரு வழியும்

இவ்என அறியக் கிளக்குங் காலை

நிறுத்த சொல்லே குறித்துவரு கிளவியென்று

ஆயீ ரியல புணர்நிலைச் சுட்டே

(5)
 

க-து:

மெய்யும்   உயிரும்  தம்முள்  ஒத்தும்  மாறியும், நின்று புணரும்
என்ற புணர்ச்சிநிலை,  இருமொழிகளின் அடிப்படையில்  நிகழும்
என்கின்றது.
 

பொருள: புணர்ச்சிநிலைமையாகிய கருத்து இவை என அறியக் கிளந்து
கூறுமிடத்து   உயிரீற்றுச்   சொல்லின்முன்   உயிர்    முதன்மொழிவரும்
வழியும்,    உயிரீற்றுச்    சொல்லின்முன்    மெய்ம்முதல்   மொழிவரும்
வழியும்,   மெய்யீற்றுச்   சொல்லின்   முன்  உயிர்  முதன்  மொழிவரும்
வழியும்,  மெய்யீற்றுச்   சொல்லின்முன்      மெய்ம்முதன்மொழி   வரும்
வழியும்  அம்மொழிகள்  முதற்கண்    நிறுத்தப்     பெற்ற   சொல்லும்,
அதன் பொருள்  விளக்கங்கருதிக் குறித்து எதிர்வரும்   சொல்லும்   என
அவ்விரண்டு இலக்கணத்தனவாகும்.
 

புணர்ச்சி என்பது நின்ற சொல்லின் ஈற்றெழுத்தும் அதன்   எதிர்வரும்
சொல்லின்     முதலெழுத்தும்      இயையும்     நிலைமைத்தெனினும்,
நிறுத்தசொல்லின்     திணைபால்வகை    முதலியவற்றானும்     குறித்து
வருகிளவியின் திணைபால் வகை முதலியவற்றானும்  அல்வழி,  வேற்றுமை
என்னும் பொருள் நோக்கினானும், அவை இயல்பும் திரிபுமாகிய நிலைகளை
எய்துதலான், புணர்ச்சி இலக்கணம் சொற்களை அடிப்படையாகக் கொண்டே
நிகழும் என்பதனை உணர்த்த ‘‘நிறுத்த சொல்லே குறித்து வருகிளவி என்று
ஆயீ ரியல’’ என்றார்.
 

ஒருவர்    ஒருகருத்தைத்    தொடர்மொழியாற்     கூறமுற்படுங்கால்
அடுத்தடுத்து   வரும்   சொல்லின்  பொருள்நிலைக்கேற்ப முதற்சொல்லை
அமைத்துக் கூறுவராதலின் நின்றசொல் என்னாது ‘‘நிறுத்தசொல்’’ என்றும்,
அவ்வாற்றானே எதிர்வரும் சொல்லையும்   குறித்து   வருகிளவி  என்றும்
குறியீடு   செய்தார்.   இக்குறியீடுகளின்   நுண்மையை       இடைக்கால
இலக்கணநூலார் ஓராராயினர்.
 

எ - டு:  நம்பி   சென்றான் - நம்பிச்சென்றான்; இரண்டினும்  நிறுத்த
சொல்லுள்   முன்னது   பெயர்; பின்னது வினை. ஆடிக்   கொண்டான் -
ஆடிக்குக் கொண்டான்: முன்னது வினை; பின்னது   பெயர்.  வேல்கடிது -
வேற்கடுமை:  முன்னது   அல்வழி;  பின்னது  வேற்றுமை.  மலர்கொடி -
மலர்க்கொடி:  முன்னது  வினைத்தொகை;  பின்னது  வேற்றுமைத்தொகை.
அவர் கண்டார் - அவர்க்கண்டார்; முன்னது முதல்  வேற்றுமைத் தொடர்;
பின்னது  இரண்டாம்   வேற்றுமைத்   தொடர்.  நாகு  சிறிது - நாகழகிது:
முன்னது   முற்றியலுகர  மாதற்கும்  ஏற்றது;  பின்னது  குற்றியலுகரமாயே
புணர்ந்தது.  ஏனையவும்   இவ்வாறே   சொற்பொருள்  அமைதிக்கேற்பப்
புணர்ச்சி   நிலைமை   அமைந்து  வருமாற்றை  மேல்வரும்  விதிகளான்
ஓர்ந்துணர்ந்து கொள்க.