சூ. 109

அவைதாம்

மெய்பிறி தாதல் மிகுதல் குன்றல்என்று

இவ்வென மொழிப திரியு மாறே

(7)
 
க-து:

புணர்மொழிக்கண் நிகழும் திரிபுகள் இவை என்கின்றது.
 

பொருள்:நிறுத்தசொல்லும்         குறித்து       வருகிளவியுமாகிய
புணர்மொழிகள்தாம்        திரியும்     முறைமையாவது,     பிறப்பிடத்
தடுமாற்றத்தான்  வடிவு வேறுபடுதலும்  ஒலிமிகுதலும் ஒலிகுன்றலும் ஆகிய
இவைஎன்று கூறுவர் ஆசிரியர்.
 

நிறுத்தசொல்லும்   குறித்துவருகிளவியும்    அதிகாரப்பட்டு  நிற்றலின்
அவைதாம்   என்றார்.    இத்திரிபுகள்    அவ்இருமொழிக்    கண்ணும்
ஏற்றபெற்றி நிகழுமாதலின். ‘என்று’ என்பது எண்ணின்கண்வந்தது.
 

‘மெய்’  என்றது   உறுப்புக்களான்  உறும்   வடிவத்தை.   ‘பிறிதாதல்’
என்றது  வடிவமாற்றத்தால்  எய்தும்  எழுத்தொலியை.  ‘மிகுதல்’  என்பது
அவ்எழுத்தொலி    தனக்குரிய      மாத்திரையினும்   ஓங்கி   நிற்றலை.
‘குன்றல்’ என்பது தனக்குரிய மாத்திரையை இழந்து நிற்றலை.
 

வரிவடிவின்கண், மெய் பிறிதாதலை அங்ஙனம்   பிறிதாய   எழுத்தின்
வடிவத்தை    எழுதியும்,   மிகுதலை அவ்எழுத்தையே உடன் வரைந்தும்,
குன்றலை அவ்எழுத்தை எழுதாது நீக்கியும் உணர்த்தல் வேண்டும்.
 

ஒருமொழிக்கு    உறுப்பாகி   நிற்கும்    எழுத்துள்   ஒன்று நீங்கின்
அம்மொழிப்பொருள்    சிதையுமாகலின்   கெடுதல்  என்னாது ‘‘குன்றல்’’
என்றார்.   இவை   மூன்றும்   திரிபு.     எனவே      இவையல்லாதது
இயல்பெனத்தானே   போதருதலின்     இயல்பாவதிது,    எனமிகைபடக்
கூறாராயினர்.
 

எ-டு : பொற்குடம் -மெய்பிறிதாதல்;  கிளிப்பிள்ளை -மிகுதல்; அறநெறி
- குன்றல்;    பொன்மலை - இயல்பு.     இவை   பெயரும் பெயருமாய்ப்
புணர்ந்தன.   ஆட்கொண்டான்,     உலாப்போந்தான்,      மரநட்டான்,
கண்பெற்றான், இவை பெயரும் தொழிலுமாய்ப்  புணர்ந்தன. அராஅப்பாம்பு
- பழுஉப்பல்  என  உயிர்மிக்கது. (இவை  அளபெடையல்ல)  ‘‘திரிபிடன்’’
என்றதனான்   ஒரு  புணர்ச்சிக்கண்  இத்திரிபு   ஒன்றேயன்றி  இரண்டும்
சிறுபான்மை மூன்றும் ஒருங்கு  வருமென   அறிக. எ-டு: சாக்குத்தினான் -
குன்றலும் மிகுதலும்  ஒருங்குவந்தன.   பனங்காய்  -   குன்றல்   மிகுதல்
மெய்பிறிதாதல் மூன்றும் வந்தன.
 

இக்குறியீடுகளின்  நுண்மையும்   இலக்கணப்பயனும் ஓராமல் தோன்றல்
திரிதல் கெடுதல் எனக் குறியீடு செய்தனர் இடைக்கால ஆசிரியன்மார்.