சூ. 11 :மெய்யின் அளபே அரையென மொழிப 

(11)
 

க-து :

மெய்யெழுத்துக்கள்   ஒலிக்கும்      நிலைமைக்கண்    எய்தும்
மாத்திரையளவு கூறுகின்றது.
 

பொருள் :  உயிரொடு     இயையாமல்     உயிரைச்     சார்ந்தும்,
உயிர்மெய்யினைச்     சார்ந்தும்      ஒலிக்குமிடத்து     மெய்யெழுத்து
ஒவ்வொன்றற்கும் மாத்திரை அளவு அரையெனக் கூறுவர் புலவர்.
 

- டு : ஆக்கம், அன்பு, நங்கை,  வேங்கை,  ஆண்,  காண், ஏர், நீர்
என    இடையிலும்    இறுதியிலும்   உயிர் - உயிர்மெய்களைச்  சார்ந்து
புள்ளியுற்று அரைமாத்திரை ஒலிக்குமாறு கண்டுகொள்க.
 

மெய்கள்   தனித்தியங்காமையான்    பின்னர் ‘‘மெய்யின்    இயக்கம்
அகரமொடு   சிவணும்’’    எனவிதிப்பார்.    அம்முறைமையான்  அவை
சாரியைபெற்று இசைக்குமிடத்து   அவ்விசை   சாரியை   அகரத்திற்குரிய
தாகலின் தனிமெய்க்கு மாத்திரை உண்டோ  இல்லையோ  என்னும்  ஐயம்
நேர்தலின் அவ்ஐயம் நீங்க  அது  அரைமாத்திரை  பெறும்  என  அதன்
தன்மை கூறப்பட்டது.
 

மெய்யெழுத்து  ஒலிக்கும்  நிலையை ‘‘மெய்யின் இயற்கை புள்ளியொடு
நிலையல்’’  எனப்  பின்னர்க்  கூறுவார்  (புள்ளி  என்பது  ஒலிக்குறியீடு)
அங்ஙனம் ஒலிக்குமிடத்து அவை அரைமாத்திரையளவே ஒலிக்கும் என்பது
விளங்க ‘‘மெய்யின் அளபே அரையென மொழிப’’ என வழிநூல் வாய்பாடு
கொடுத்தும்,  புள்ளியொடுநிற்றல்  மெய்யின்  தன்மையேயாதலின்  ‘‘மெய்’’
எனவிதந்தும் கூறினார்.