|
சூ. 110 : | நிறுத்த சொல்லும் குறித்து வருகிளவியும் | | அடையொடு தோன்றினும் புணர்நிலைக் குரிய | (8) | க-து: | புணர்மொழிச் சொற்களைப் பற்றியதோரையம் அகற்றுகின்றது. | பொருள் :மேற்கூறிய நிறுத்த சொல்லும் குறித்து வருகிளவியும் பெயர்ச்சொல்லும் தொழிற்சொல்லுமாகப் பட்டாங்கு வருதலேயன்றி அவை அடையெடுத்து வரினும் புணரியல் நிலைக்கு உரியனவாம். | அஃதாவது, “பெயரொடு பெயரைப் புணர்க்குங்காலும் பெயரொடு தொழிலைப் புணர்க்குங்காலும்’’ என்றதனான் பெயர்ச்சொல்லும் தொழிற்சொல்லும் பட்டாங்குவரல் வேண்டும் போலும், என நின்ற நிலையை ஓர்ந்து அவை தாமே வரினும், அடையெடுத்து வரினும் புணர்க்கப்படும் என்று கூறியவாறு. அடையாவன: பெயர்ப் பொருளும், வினை நிலையும், பண்பு, செயல் முதலியவற்றான் எய்தி நிற்கும் சிறப்புக்களை உணர்த்திப் பொதுமை நீக்கியும், சிறப்பித்தும் நிற்கும் நால்வகைச் சொற்களுமாம். | எ-டு :கிள்ளிவளவன் நாடு, உலகளந்தான் இறைவன், தொல்காப்பியன் நூல்; கறிசோறு உண்டான், ஊருணி நிறைந்தது, பொற்றொடி வந்தாள், கிளிமொழி வந்தாள்; பதினொன்று பெற்றான், உண்டசாத்தன் வந்தான், சாத்தன் உண்டுவந்தான் எனவும் பிறவாறும் வரும். | இவ் அடையும் அடைகொளியும் ஒன்று ஒன்றின்பொதுமை நீக்கியும், சிறப்பித்தும் நின்று ஒருபொருளே பயத்தலின் இவை யெல்லாம் ஒருசொல் நீர்மைத்தாய் அமைந்து புணரும் என்பது கருத்து. செந்தாமரை, அரிவாள், கதிர்வேல், வேழக்கரும்பு முதலியவை, உயிர்மெய்யெழுத்து என்றாற்போல ஒற்றுமை நயமும் வேற்றுமை நயமும் உடையனவாகலின் சொல் இரண்டாயினும் ஒருபொருளே உணர்த்தி நிற்றலின் ‘‘அடையொடு தோன்றினும் புணர்நிலைக் குரிய’’ என்றார். | இந்நூற்பாவிற்குப் போலியும் முரணுமாக உரையாசிரியன்மார் கூறிய பொருள் ஒவ்வாமையை ஓர்ந்தறிக. |
|