சூ. 111 :

மருவின் தொகுதி மயங்கியல் மொழியும்

உரியவை உரிய புணர்நிலைச் சுட்டே

(9)
 
க-து:

இதுவுமது.
 

பொருள்: வேற்றுமை முதலாய   பொருள்படச்  சொற்கள், தொக்குத்
திரிந்து   ஒருசொல்லாய்   மருவி   நிற்கும்   சொற்களும்,   இடம்மாறித்
திரிந்து  நிற்கும்   சொற்களும்,    புணரியல்  நிலையைக்  கருதுமிடத்துக்
கவர்பொருளில்லாதனவாய் வருவனயாவும் மேற்கூறியாங்கு உரியவாகும்.
 

‘உரியவை உரிய’ என்றதனான் உரியவை அல்லாதனவும்  உளவென்பது
பெறப்படும்.  அவையாவன:  இழிசினர்  வழக்கும்,  பிழைபடு  சொற்களும்,
கவர்பொருள்படுவனவுமாகும்.
 

எ-டு: சோணாடு, மலாடு,  தெனாது,   வடாது இவை மருஉமொழிகள்.
மீகண்,  முன்றில்,    நுனிநா,    புறநகர்    இவை மயங்கியல் மொழிகள்.
அருமந்தபிள்ளை    என்பதுபோல்வன    சான்றோர்    வழக்கன்மையின்
எடுத்துக்காட்டாதற்கு ஏலா என்க. இனி உரியவல்லாதன: வந்திச்சி, போச்சி,
ஆகச்சே, தோப்பனார், தங்கச்சி, கல்லை என்றாற் போல்வனவாம்.