|
சூ. 113 : | ஐஒடு குஇன் அதுகண் என்னும் | | அவ்ஆறு என்ப வேற்றுமை உருபே | (11) | க-து: | வேற்றுமைப் பொருட்புணர்ச்சி கூறிய அதிகாரத்தான் அவற்றிற்குரிய உருபுகள் இவை எனக் கூறுகின்றது. | பொருள்:ஐ, ஒடு, கு, இன், அது, கண் என்று கூறப்படும் அவ்வகை ஆறும் வேற்றுமை செய்யும் உருபுகள் எனக் கூறுவர் ஆசிரியர். | சொல்லதிகாரத்து வேற்றுமை எட்டு எனக்கூறுதலின் ஈண்டு ஆறு எனக்கூறுதல் முரண் எனக் கருதற்க என்பார், ‘அவ்ஆறு என்ப வேற்றுமை உருபே’’ என்றார். புணர்மொழியிடத்துப் பொருள் வேறுபாட்டினைச் செய்வனவும் தமக்கென உருபுடையனவும் ஆறே ஆதலின் ‘‘ஆறு என்ப’’ என்றார். பிற விளக்கங்கள் வேற்றுமையோத்து உரையுள் கூறப்படும். |
இவ்வுருபுகள் நிறுத்த சொல்லின் ஈறாயும் குறித்து வருகிளவியாயும் புணரும் வழி எய்தும் இலக்கணங்களை உருபியலுள் விரித்தோதுவார். பின்னர் எடுத்தாளுதற் பொருட்டு இவற்றின் பெயரும் முறையும் ஈண்டு அமைத்துக் கொள்ளப்பட்டன என்க. ஒன்றென முடித்தல் என்னும் உத்தியான், இவ்வுருபுகளின் பொருள்பட வரும் சொல்லுருபுகட்கும் இவ்வுருபுகட்கு ஓதும் இலக்கணமெல்லாம் எய்துமெனக் கொள்க. அவையாவன: இன்-ஆன், மாறு, உளி, கொண்டு, பொருட்டு, நின்று, உடைய முதலியவாய் எடுத்தோத்தானும், உடம்பொடு புணர்த்தலானும் ஆசிரியர் கூறுவனவும் பிறவுமாம். | எ-டு :நூலைக்கற்றான், அறிவொடு சிறந்தான், கண்ணாற் கண்டான், பயிருக்குவேலி, கூழின்பொருட்டு ஏவல்செய்தான், மலையின் வீழ் அருவி, மரத்தினின்று வீழ்ந்தான். சாத்தனது புகழ், என்னுடையநிலம், மணியின்கண்ஒளி, இறைவனிடம் வேண்டினன் எனவரும். | வேற்றுமையும் அல்வழியும் பற்றிய சிறுகுறிப்பு | வேற்றுமை அல்வழி என ஈண்டுக் கொள்ளப்படுபவை, இருதிணைப் பொருள்களை ஒருவர் மொழி வாயிலாகக் கூறுமிடத்து அப்பொருள்களின் நிலையைக் குறிப்பிடும் இலக்கணக் குறியீடுகளாகும். | மக்களின் உள்ளத்தே கருத்துத் தோன்றுவதும் அக்கருத்துச் சொற்களான் வெளிப்படுவதும் யாதானுமொரு பொருளைப் பற்றியே என்பது வெளிப்படை. கருத்துத் தோன்றுவதற்கு அடிப்படையாக உள்ள ஒவ்வொரு பொருளும் சில தன்மைகளையும் செயல்களையும் இயல்பாகவே உடையனவாதலின் ஒருவர் ஒன்றைப் பற்றிப் பேசுங்கால் அப்பொருளை முதற்கண் நினைந்து பின்னர் அதனைப் பற்றிய தன்மையையோ செயல்களையோ சொற்களான் உணர்த்துவர். | ஒருபொருளின் பல்வேறு நிலைமைகளுள் ஒருநிலை பிறிதொரு நிலைக்கு வேறுபட்டதாகலின் பெயர்க் குறியீட்டான் சுட்டப்படும் பொருளே வேறுபாடுறுதற்கு உரியதென்பதும் அவ்வேறுபாடு அதன் குணப்பண்பானும் தொழிற்பண்பானும் எய்துதலின் வேறுபாட்டினைச் செய்பவை இருவகை வினைகளே என்பதும் தெளியப்படும். |
அங்ஙனம் ஒரு பெயர்ப்பொருள் எய்தும் வேறுபாடுகளைத் தமிழிலக்கண நூலோர் எட்டுவகைப்படுத்தினர். பொருளையும் அப்பொருள் எய்தும் வேறுபாட்டினையும் மொழியாற் குறியீடு செய்யுமிடத்துப் பொருளைப் பெயர் எனக் குறியீடு செய்தனர். அது வேறுபட்ட நிலையைப் பெயர்ச்சொல் வினைச்சொல் இடைச்சொல் உரிச்சொல் ஆகிய சொற்களான் உணர்த்துவர். | மொழியமைப்பின்வழி ஒன்றை உணர்த்துங்கால் அப்பொருளின் குறியீடாகிய பெயரும் அதனை வேறுபடுத்திக் காட்டும் சொற்களும் இணைந்து கோவையாக அமைதலே சொற்றொடராகும். | அவ்வாற்றான் வேற்றுமை என்பது தனிமொழிக்கண் காணப்படாது. இரண்டு முதலாகிய சொற்றொகுதிக் கண்ணேதான் காணப்படும் என்பது விளங்கும். சொற்றொகுதியாகிய தொடர் என்பது, நிறுத்த சொல்லும் குறித்து வருகிளவியுமாகவே அமையும். நிறுத்த சொல்லாகிய பெயரை எழுவாய் முதலாக வேறுபடுத்தி வேற்றுமை செய்வன குறித்து வருகிளவியாக வரும் பெயர்ச்சொல் அல்லது வினைச்சொல் என்பதும் விளங்கும். அவ்வாற்றான் வரும் வேற்றுமைத் தொடர்கள் எழுவாய், வேற்றுமைத் தொடர், செயப்படுபொருள் வேற்றுமைத் தொடர், கருவிப்பொருள் வேற்றுமைத் தொடர், கோடற் பொருள், வேற்றுமைத் தொடர், அளவை அல்லது எல்லைப் பொருள் வேற்றுமைத் தொடர், உடைமைப் பொருள் வேற்றுமைத் தொடர், இடப்பொருள் வேற்றுமைத் தொடர், விளிப்பொருள் வேற்றுமைத் தொடர் என எட்டு வகையாகும். | இனி, நிறுத்த சொல்லாகிய பெயர்ப்பொருளை வேறுபடுத்தக் குறித்துவரு கிளவிகளாக வந்து நிற்பவை யாவும் திரிபின்றி இஃது இவ்வேற்றுமைத் தொடர் எனப் புலப்படுத்தி நிற்றலில்லை. சிலவே தெளிவாக நிற்கும். சில ஒன்றற்கு மேற்பட்ட வேற்றுமைகளைக் கருதற்குரியவாக நிற்கும். அஃதாவது, சாத்தன் சோறுண்டான் என்னும் தொடர் செயப்படுபொருள் வேற்றுமை என்பதைத் தெளிவாக உணர்த்தி நிற்கிறது. ‘இது புலிகொல்யானை’ என்னும் தொடர் செயப்படு பொருள் எனக் கொள்ளவும் கருவிப்பொருள் எனக் கொள்ளவும் வாய்ப்புடையதாக நிற்கின்றது. ‘இது மரவேலி’ என்பதும் அவ்வாறு நிற்கின்றது. | அதனான் திரிபின்றி ஒரு வேற்றுமையை வரைந்து உணர்த்துதற் பொருட்டு இலக்கண நூலோர் வேற்றுமை உருபுகளைப் படைத்து அவற்றைப் பெயரின் பின் இணைத்துக் கூறுவாராயினர். அவையாவன ஐ, ஒடு, கு, இன், அது, கண் என்பவையாம். இவற்றையே வேற்றுமைக்குரிய பெயர்க் குறியீடாக ஆசிரியர் கூறுவர். ஒரோவிடத்து வேற்றுமை எனவும் ஆளுவார். |
வேற்றுமை உருபுகளைச் செயப்படுபொருள்முதல் இடப்பொருள் ஈறாக ஆறுவேற்றுமைகளுக்கே படைத்து எழுவாய் வேற்றுமைக்கும் விளிவேற்றுமைக்கும் படையாமல் அவற்றையே உருபாகக் கொள்ளுமாறு விட்டுள்ளனர். | அவ்வாற்றான் எட்டுவகை வேற்றுமைத் தொடர்களுள் தனக்கென உருபுடையவை ஆறாகவும் இல்லாதவை இரண்டாகவும் அமைந்தன. | அங்ஙனம் தனக்கென வேற்றுமை உருபுகளையுடைய தொடர்களின் புணர்ச்சியை மட்டும் வேற்றுமைப் புணர்ச்சி என்றும் மற்றைய இரண்டையும் அல்வழிப் புணர்ச்சி என்றும் வகுத்தனர். கூறப்பெற்ற ஐ முதலிய உருபுகள் வெளிப்பட்டு நிற்கும் புணர்ச்சி வேற்றுமை உருபு புணர்ச்சி என்றும் வெளிப்படாது தொக்கு நிற்கும் புணர்ச்சியை வேற்றுமைப் பொருட்புணர்ச்சி என்றும் குறியீடு செய்துணர்த்தினர். | அம்முறைமையான் அல்வழி என்பதற்கு வேற்றுமை உருபு அல்லாதவழிப்புணர்ந்த தொடர் என்பது பொருளாதல் விளங்கும். அதனான் தொன்னூலோர் வேற்றுமை வழியை முதற்கண் கூறி அதற்கு மாறுபட்ட நிலை என்பது விளங்க அல்வழியைப் பிற்கூறினாராவர். | எனவே,பெயர்ப்பொருள் வேறுபடும்நிலை எட்டு என்பதும் உருபுகளான் வேறுபடும்நிலை ஆறு என்பதும் விளக்கமாகும். தமக்கென உருபுகளையுடைய தொடர்களை நோக்க உருபில்லாதவை அல்வழி எனப்பட்டன என்பதும் புலனாகும். அந்நயமும் நுட்பமும் தோன்றத் தொன்னூலோர் இயல்புபுணர்ச்சி திரிபுபுணர்ச்சி என்றாற்போல இயல்புவழி, வேற்றுமைவழி என்னாமல், உயர்திணை அஃறிணை என்றாற்போல வேற்றுமைவழி (அவை) அல்வழி எனக் குறியீடு செய்தருளினர். வேற்றுமைவழி என்பது இறுதிதொக்கு வேற்றுமை என வருதல் மரபாயிற்று. | உருபில்லாத எழுவாய்த் தொடரையும் விளித்தொடரையும் வேற்றுமை என்றது எவ்வாறு எனின்? ஒரு பொருளின் பல நிலைகளுள் ஒன்றைப் பற்றிக் கூறுங்கால் அந்நிலை ஏனையவற்றினின்று வேறுபடுதலின் அது வேற்றுமையாயிற்று. அஃதாவது; சாத்தன் நடந்தான் என்றவழி; இருத்தல், கிடத்தல், உண்ணல், ஓடுதல் முதலாய அவனது பல தொழில்களுள் ஒன்றைச் சுட்டி ஏனையவற்றை விலக்குதலான் அந்நோக்கிற் சாத்தன் என்னும் பெயர் வேற்றுமையுறுகின்றது. அவ்வேற்றுமை பிறிதொரு வினை முதலான் நிகழாமல் தன்தொழிலான் முடிவுறுதலின் அந்நிலைமை முதல் வேற்றுமை எனப்பட்டது. நடந்தான் என்னும் பயனிலைக்குச் சாத்தன் வினை முதலாக (கருத்தாவாக) நிற்றலின் அதற்கு வேறு உருபு கூட்டிக் கூற வேண்டாமல் அப்பெயரே உருபு நிலையில் நிற்பதாயிற்று. இனி, விளித்தொடரின்கண் முதல் வேற்றுமையாகிய பெயர் சிறிதுதிரிந்தும் திரியாதும் முன்னிலைப்பட்டு நிற்றலான் அதற்குத் தனியே உருபு கூறப்படாதாயிற்று. எனவே இரண்டும் ஓராற்றான் வேற்றுமைப்படுதலின் வேற்றுமை எனப்பெற்றன. |
உருபையும் வேறுபடும் பொருள் நிலையையும் பொதுப்பட வேற்றுமை என வழங்குவர் உரையாளர். அவற்றை முறைப்படுத்தி வைத்த நிரலான் எண்ணுப்பெயரானும் வழங்குவர் நூலோர். | கருத்துணர்த்தற்கு எழுவாயாகத் தோன்றி நிற்பது பொருளின் குறியீடாகிய பெயரேயாதலின் எழுவாய் வேற்றுமையைப் பெயர்வேற்றுமை எனக் குறியீடு செய்து பெயரே அதற்கு உருபாகவும் கூறினர். பெயர் ஐ ஒடு கு இன் அது கண் என்பது வைப்பு முறை. வேற்றுமைகளுக்குரிய பெயர்க் குறியீடும் அவையேயாம். | இதுகாறும் கூறியவாற்றான் பொருள் ஒரு வேற்றுமைப்படும் நிலை எட்டு என்பதும் இரண்டாவது முதல் ஏழாவது வரையான ஆறு வேற்றுமைகளுக்குச் சிறப்பாக உருபுகள் விதிக்கப்பட்டுள்ளன என்பதும் எழுவாய்வேற்றுமைக்கும் விளிவேற்றுமைக்கும் தனியே உருபுகள் விதிக்கப்படவில்லை என்பதும் தொடர்கள் புணர்மொழிகளான் அமைதலின் உருபுடைய ஆறு வேற்றுமைத் தொடர்களே வேற்றுமைப் புணர்ச்சித் தொடர், அவையல்லாத ஏனைய வெல்லாம் அல்வழிப் புணர்ச்சித் தொடர் என்பதும், தனி உருபு இன்மையான் எழுவாயும் விளியும் அல்வழித் தொடர் எனப்பட்டன என்பதும் அவையும் வேற்றுமைகளே என்பதும் புணர்ச்சி இலக்கண முறையில் வேற்றுமை என்பது அறுவகைப்படும் என்பதும் சொல்லிலக்கண முறையில் வேற்றுமைஎன்பது எட்டு வகைப்படும் என்பதும் புலனாகும். |
|