இனி, யாஅத்துக்கோடு, பிடாஅத்துக்கோடு, தளாஅத்துக்கோடு என அத்துப் பெறுதலும் கொள்க என்பார் நச்சினார்க்கினியர். உருபிற்கு ஓதிய சாரியைகள் ஒல்லும் வழியெல்லாம் பொருட்கும் வரும் என்பது ஆசிரியர் கருத்தாகலின், அஆ என்னும் மரப் பெயர்க் கிளவிக்கு (சூ. 182) என்பதனான் அத்துச்சாரியை வருதல் அமையுமாகலின் ஈண்டு மிகைப்படுத்து அடக்க வேண்டாமையறிக. மேல் வருவனவற்றிற்கும் இவ்விளக்கம் ஒக்கும். |