|
சூ. 115 : | ஆறன் உருபின் அகரக் கிளவி | | ஈறாகு அகரமுனைக் கெடுதல் வேண்டும் | (13) | க-து: | ஒருசார்புணர்ச்சிக்கண் ஆறாம் வேற்றுமை உருபிற்காவதொரு விதி கூறுகின்றது. | பொருள்:ஆறாம்வேற்றுமை உருபாகிய அது என்னும் இடைச்சொல்லின்கண் நிற்கும் அகரமாகிய எழுத்து நிறுத்தசொல்லின் ஈறாக வரும் அகரத்தின் முன் குன்றும். | ஆகும் அகரஈறு என்றதனான் அஃது இயல்பீறன்று; விதியீறு என்பது பெறப்படும். அவை நெடுமுதல் குறுகி அகரச்சாரியைப் பெற்று நிற்கும்.என, தன, நும, நம, எம, தம, நின என்பனவாம். | எ-டு :எனது வீடு, தனது வீடு, நினது வீடு, எமது வீடு, நமது வீடு,தமது வீடு, நுமது வீடு எனவரும். என முதலியவற்றுள் நிற்கும் சாரியை அகரத்திற்குக் கேடுகூறாமல் உருபின் அகரத்திற்குக் கூறியதன் காரணம், அச்சாரியை நான்கனுருபிற்கும் ஆறனுருபிற்கும் பொதுவாக விதிக்கப்பட்டமையான் என்க. | ‘நினவ கூறுவல் எனவ கேண்மதி’ என்பதனை எடுத்துக் காட்டி நச்சினார்க்கினியர் கூறும் அமைதி பொருந்துமாறில்லை. அவை குறிப்புவினைமுற்று விகுதியாதலன்றி உருபாகாமையின் என்க. |
|