சூ. 117 :

உயர்திணைப் பெயரே அஃறிணைப் பெயரென்று

ஆயிரண் டென்ப பெயர்நிலைச் சுட்டே

(15)
 
க-து:

மேல்   (சூ-6)  ‘‘பெயரொடு   பெயரைப்   புணர்க்குங்  காலும்’’
என்றபெயர் இத்துணைய என்கின்றது.
 

பொருள்: புணர்நிலைக்       கருத்தொடு       வரும்    பெயர்கள்
உயர்திணைப்பெயர், அஃறிணைப்பெயர் என அவ்விரண்டு வகையின என்று
கூறுவர் ஆசிரியர்.
 

இனி,     இச்சூத்திரத்தை  அடுத்து ‘‘வினையும் குறிப்புமென்று ஆயிரு
திணையின்      அனைமர     பினவே     வினைநிலைச்     சுட்டே’’
என்றாற்போல்வதொரு   நூற்பா    அமைந்திருத்தல்  வேண்டும்.    அது
காணாமையின் ‘தன்னினம் முடித்தல்’ என்பதனான்,    தொழிற்சொல்லாகிய
வினைச்சொல்லும் உயர்திணைவினையே,   அஃறிணைவினையே    என்று
அங்ஙனம் இருவகைப்படுமென்று கொள்க.
 

‘‘வேற்றுமை வழிய பெயர்புணர் நிலையே’’ என்னும்    சூத்திரத்திற்குப்
பழைய     உரையாளர்     பெயருக்குப்பின்     உருபு     வருமென்று
உரைகண்டமையான்  இச்சூத்திரம் அப்பெயர்கள் இவை எனக் கூறுவதாகக்
கொண்டு வினைச்சொல்லின்பின் உருபுவரா எனக் கருதி வினைப் பாகுபாடு
கூறிய சூத்திரத்தைக் களைந்து விட்டனர் போலும்.
 

அஃது    எவ்வாறாயினும்  ‘‘பெயரொடுபெயரைப் புணர்க்குங் காலும்....
தொழிலொடு தொழிலைப் புணர்க்குங் காலும்’’ எனவிதந்த     பெயரையும்,
தொழிலையும்     சுட்டி      உணர்த்தல்   வேண்டுவது கடப்பாடாகலின்
அம்முறையான் ‘‘ஆயிரண் டென்ப பெயர்நிலைச்  சுட்டு’’    என்பதன்பின்
ஆயிரண்டென்ப    வினைநிலைச்சுட்டே எனக்   கூறியிருத்தல் வேண்டும்.
வருகின்ற நூற்பாவும் இதனை வலியுறுத்தும்.