சூ. 119 :

அவைதாம்

இன்னே வற்றே அத்தே அம்மே

ஒன்னே ஆனே அக்கே இக்கே

அன்னென் கிளவி உளப்படப் பிறவும்

அன்ன என்ப சாரியை மொழியே

(17)
 
க-து:

‘எழுத்தே   சாரியை ஆயிரு  பண்பின் ஒழுக்கல் வலிய’ எனவும்
‘அவற்றுவழி  மருங்கின்    சாரியை     வருமே’      எனவும்
மேற்கூறப்பெற்ற      சாரியை    இடைச்சொற்கள் இவை எனக்
கூறுகின்றது. 

 

பொருள் :மேற்கூறப்பெற்ற சாரியைதாம்  இன்னும், வற்றும்,  அத்தும்,
அம்மும், ஒன்னும், ஆனும்,    அக்கும்,  இக்கும்,  அன் என்னும்  கிளவி
உளப்பட     அவைபோல்வன   பிறவும் சாரியை மொழிகள் எனக்கூறுவர்
நூலோர்.
 

உளப்பட அன்ன பிறவும் எனக்கூட்டுக. அதனான் இவை சிறப்புடையன
என்பதும் பெறப்படும். ஏகாரம் ஈற்றசை. அன்னபிறவாக வருவன : அ,உ, ஈ,
ஏ, ஐ, தம், நம், நும், கு, இன் முதலியனவாம்.
 

வேற்றுமைப்    பொருள்    குறித்தும்   அல்வழிப் பொருள் குறித்தும்
சொற்கள்    தம்முட்    புணருங்கால்   அவை   பெயரும் வினையுமாகப்
புணரும்என  மேல்  விதந்து   கூறப்பெற்றமையானும்,   உரிச்   சொற்கள்
பெயராயும்   வினையாயும்    அடையாயும்    நின்று     புணர்தலானும்,
இடைச்சொற்களுள் வேற்றுமைப்  பொருள்வயின்  உருபாக வருவனவற்றின்
புணர்ச்சி இயல்புகளை உருபியலுள் விதந்து கூறுதலானும்,தத்தம் பொருளாய்
வரும் இடைச்சொற்களும் உவமஉருபிடைச் சொற்களும் பெயர் வினைகளுள்
அடங்கிப்   புணர்ச்சி     விதிகளை     எய்துதலானும்,  அவற்றைவிட்டு,
ஒருமொழியைச் சார்ந்தன்றி வருதலாற்றாத சாரியை    இடைச்   சொற்கள்
புணர்மொழிகளின்    இடையே    வருங்கால்   அவை   எய்தும் திரிபும்
இயல்புமாகிய நிலைமைகளை இவ்வியலின்  கண்ணே   வைத்து  ஆசிரியர்
விளக்குவாராயினர்.
 

இனி,   இவ்வியலுள்    எடுத்துக்கூறப்பெறும்  சாரியை விதிகளுக்குரிய
எடுத்துக்காட்டுக்கள் அவ்வவ்விடத்துக் காட்டப்பெறும். அங்ஙனம்  விதந்து
கூறாமல் அன்னபிறவும் எனத்தழுவிக் கொள்ளப்பெற்ற சாரியைகட்கு ஈண்டு
எடுத்துக்காட்டுக்கள் தருதும்.
 

அ: தமக்கு, தமது, பொருநக்கடுமை, எகினப்புள் எனவும், க, ங எனவும்
அகரச்சாரியை வந்தது. ஆ : (இல்பொருள்) இல்லாப்பொருள் என ஆகாரச்
சாரியை வந்தது. ஈ : சென்றீ பெருமநிற் றகைக்குநர்  யாரே  என  ஈகாரச்
சாரியை வந்தது. ஏ : உழக்கேயாழாக்கு,  ஒன்றேகால் என ஏகாரச் சாரியை
வந்தது. அட்டி லோலைத் தொட்டனை நின்மே  என்பதும் ஏகாரச்சாரியை.
ஐ: (இல்பொருள்) இல்லைப்   பொருள் - அப்பொருளிரட்டாதிவணை யான
என ஐகாரச் சாரியை   வந்தது. தம் : எல்லார் தம்மையும் எனவரும். நம் :
எல்லா  நம்மையும்   எனவரும்.  நும்: எல்லீர் நும்மையும் எனவரும். கு :
உண்குவ,    திண்குவ எனவரும். ன் : ஆன்கோடு, மான்கோடு, எனவரும்.
பிறவும் அன்ன.
 

இடைச்சொற்கள்   என்பவை  பெயர்வினைகளின் மரூஉ வடிவங்களாம்.
இச்சாரியை   மொழிகளின்   மூல வடிவங்களைப் பொருந்து மாற்றான்பின்
வருமாறு கொள்ளலாம். இவ்விளக்கம் ஊகத்தின் அடிப்படையிற் கூறுதலான்
கருத்து வேறுபாடுகட்குட்பட்டதென்க.
 

இன் : ‘ஈன்’ என்னும் சுட்டுப்பெயரின் குறுக்கமாக அமைந்த   குறியீடு.
வற்று : அற்று என்னும் (அவ்வளவினது) குறிப்புவினையை  வகரங்கெடுத்து
ஆக்கிக் கொண்டதொரு குறியீடு. அத்து: அகம்  என்னும் இடப்பெயரொடு
உடைமைப் பொருள்தரும் துவ்விகுதியைக் கூட்டித் தகரஒற்றினைக்குறைத்து
அமைத்துக்கொண்ட குறியீடு. அம் :  ஆகும்   என்னும் முற்றுச்சொல்லின்
இடைக்குறையாகிய ஆம் என்பதன்  குறுக்கம்.    ஒன் :   ஊன்  என்னும்
சுட்டுப்பெயரின் திரிந்த வடிவமாகலாம். ஆன்:ஏதுப்பொருட்டாய உருபு தன்
வேற்றுமைப் பொருளை இழந்து சாரியையாக நிற்பதாகலாம். அக்கு :அதற்கு
என்னும் நான்கனுருபேற்ற சுட்டுப்பெயர் திரிந்த மரூஉ வடிவாகும். இக்கு :
இதற்கு என்பதன் மரூஉ வடிவாகும். அன் : ஆன் என்னும்   சாரியையின்
குறுக்கம் எனலாம். அ : ஆறாவதன்  உருபின் கடைக்குறையாகலாம். ஏ,ஐ
:இவை இசைக்குறிப்பாய் வந்து சாரியையாயின   எனலாம்.  தம்,  நம், நும்
என்பவை  மூவிடப்  பெயர்களின்  குறுக்கமாம். ன் :  ஆன்  சாரியையின்
முதற்குறை      எனலாம்.  எடுத்துக்காட்டொடு    விரிவான   விளக்கம்
தனிக்கட்டுரையிற் கண்டுகொள்க.
 

‘சாரியை’ என்பதன் பொருள், நிறுத்த சொல்லும் குறித்து வருகிளவியும்
இன்னோசையொடு     இயைதற்குத்   துணையாகி   அவற்றை இயைத்துச்
சார்ந்துநிற்றல் என்பதாம். இயைதல் சார்தல் என்பனவற்றின்  முதனிலைகள்
மாறித்தொக்க இலக்கணக் குறியீட்டுச்சொல்.