முதற்சூத்திரத்துக்கூறிய எழுத்து முப்பத்து மூன்றனுள் உயிரும் மெய்யும் இவையென முப்பது எழுத்துக்களைப் பின்னர் விதந்து கூறிவிட்டமையான் எஞ்சியவை சார்ந்துவரல் மரபினவாகிய மூன்றுமே யாதலின் அவற்றை ஏனைமூன்று, எனச் சுட்டினார். இதனாற் சார்பெழுத்துக்கட்கு ஏனையெழுத்து என்பதும் ஒருபெயராயிற்று. இவை புள்ளிபெற்று ஒலிக்கும் என்க. இவற்றுள் ஆய்தம் புள்ளியாகவே பிறத்தலின் அதன் தன்மையை உடன்சுட்டி ‘‘ஆய்தம் என்ற முப்பாற் புள்ளி’’ எனக் கூறினார். மற்றையிரண்டும் புள்ளிபெறுதலைப் பதினாறாம் சூத்திரத்தாற் கூறுவார். |