சூ. 120 :

அவற்றுள்

இன்னின் இகர மாவி னிறுதி

முன்னர்க் கெடுதல் உரித்து மாகும்

(18)
 
க-து:

இன்சாரியையின் ஓரியல்பு கூறுகின்றது.
 

பொருள்: மேற்கூறிய சாரியைகளுள் இன் என்னும் சாரியை மொழியில்
உள்ள இகரம் ஆகார ஈற்றுச் சொல்லின் முன்  கெடுதற்கும்    உரியதாம்.
உம்மையான் கெடாதும் நிற்கும் என்றவாறு.  கெடுதலும்   உரித்தாகும் என
உம்மையை மாறிக் கூட்டுக.
 

எ-டு:ஆனை (ஆ+இன்+ஐ=ஆனை) ஆவினை -ஆனொடு, ஆவினொடு
எனவரும்.  ஆவின்முன்   என்னாது   ஆவின்   இறுதி    என்றதனான்
நான்கனுருபிற்குக்  கெடாது,  ஆவிற்கு  எனவும்,  ஆறனுருபிற்குக் கெட்டு,
ஆனது எனவும் வருதல்  சிறப்பாமெனக் கொள்க. உருபு புணர்ச்சிக்கு என
விதந்து கூறாமல் பொதுப்படக்   கூறியதனான்  ஆன்கோடு, ஆவின்கோடு
எனவரும் பொருட்புணர்ச்சிக்கும் இவ்விதிகொள்க.
 

இனி,  ‘‘இன்னின்   இகரம்   மாவின்   இறுதி’’ எனவும் கொள்ளுமாறு
சூத்திரம் யாத்தமையான் மா என்னும் பெயர்க்கும் இவ்விதி கொள்க. எ-டு :
மானை-மாவினை   எனவும்   மானொடு - மாவினொடு   எனவும்  வரும்.
கெடலுமாம் என்னாது ‘உரித்துமாகும்’ என்றதனான் ஆனுக்கு,   ஆவினுக்கு
என உகரம் உடன் பெறுதலும் கொள்க.