இனி, இன்சாரியையினது னகரஒற்று வல்லெழுத்து முதலாய பெயர், வினைகள் வரின் றகரமாகத்திரியும் என்னும் விதிபற்றிய சூத்திரம் இதற்கு முன்னமைந்திருத்தல் வேண்டும். என்னை? பனியிற்கொண்டான், வளியிற்கொண்டான், பறம்பிற்பாரி, குறும்பிற்கொற்றன் என்றாற்போல இன்சாரியை பயின்று வருதலானும், ‘‘ஆனின் னகரமும் அதனோ ரற்றே’’ என ஒருமையாகச் சுட்டப்பட்டிருத்தலானும் என்க. உரையாசிரியன்மார் இத்திரிபினை உம்மையானும் உத்தியானும் தழுவிக் கொண்டனர். |