சூ. 128 : | எப்பெயர் முன்னரும் வல்லெழுத்து வருவழி |
| அக்கின் இறுதிமெய்ம் மிசையொடும் கெடுமே |
| குற்றிய லுகரம் முற்றத் தோன்றாது |
(26) |
க-து: | அக்குச்சாரியை திரியுமாறு கூறுகின்றது. |
பொருள் :எவ்வகையாய பெயர்ச் சொற்களின் முன்னரும்,வல்லெழுத்து வருமொழியாக வருமிடத்து, அக்குச்சாரியையின் இறுதி நிற்கும் ககரமெய், மேல்நின்ற ககர ஒற்றொடும் கெடும்; இறுதி நின்ற குற்றியலுகரமும் முற்றக்கெடும். |
எ-டு :தாழ் + அக்கு + கோல் =தாழக்கோல். தமிழ் + அக்கு + கூத்து = தமிழக்கூத்து எனவும், ஈமக்குடம் கம்மக்குடம் எனவும் வரும். தாழ்-தமிழ் என்பவை பொருட்பெயர். ஈம் - கம் என்பவை தொழிற்பெயர், ஆதலின் எப்பெயர் முன்னரும் என்றார். தாழக்கோல் என்பது பண்புத்தொகை. ஏனைய வேற்றுமைத்தொகை. தாழக்கோல் வேறு, திறவுகோல் வேறு- விளக்கம் பின்னர்ப் பெறப்படும். |
‘முற்ற’ என்பதை மிகையாக்கித் தமிழநூல், தமிழயாழ், தமிழவரசர் என ஏனைக் கணத்தின் முன்னரும் இவ்விதி கொள்கஎன்பர் உரையாசிரியன்மார். தமிழ்நூல், தமிழ்யாப்பு, தமிழரசர் என்றலே சால்புடைத்தாகலின் ஆசிரியர் வல்லெழுத்து வருவழி எனவிதந்தோதினார். பிறகணத்தின் முன்வருதல் சான்றோர் வழக்காயின் புறனடையாற் கோடலே தக்கது. |