சூ. 129 :

அம்மின் இறுதி க ச த க் காலை

தன்மெய் திரிந்து ங ஞ ந ஆகும்

(27)
 
க-து:

அம்முச்சாரியை திரியுமாறு கூறுகின்றது.
 

பொருள் :அம்முச்சாரியையது    மகரஒற்றுக்   கசதக்கள் வருமொழி
முதலாக    வருமிடத்துத்   தன்னுருத் திரிந்து முறையே ங ஞ ந என்னும்
ஒற்றாகும்.
 

எ-டு: புளியங்கோடு,    புளியஞ்செதிள்,   புளியந்தோல்   எனவரும்.
‘‘வரூஉம்காலை’’ என்பது ‘‘காலை’’ எனக் குறைந்து நின்றது.
 

‘தன்மெய்’ என்றதனான்  தம்,  நம்,  நும்  என்னும் சாரியைகளது மகர
ஒற்றுத்    திரிதலும்    கொள்க  என்பார். இவற்றைப் புள்ளிமயங்கியலுள்
ஆசிரியர் எடுத்தோதுதலான் ஈண்டு மிகைப்படுத்து   அடக்குதல் வேண்டா
என்க. திரிந்து எனப்பொதுப்படக்  கூறியிருப்பினும்   திரிபு     மூன்றனுள்
மெய்பிறிதாதலை ஏற்புழிக் கோடல் என்பதனாற் கொள்க.