சூ. 13 : | அரையளபு குறுகல் மகரம் உடைத்தே |
| இசையிடன் அருகும் தெரியுங் காலை |
(13) |
க - து: | மாத்திரையளவு பற்றி மெய்யெழுத்துக்களுள் ஒன்றற்குப் புறனடை கூறுகின்றது. |
பொருள்:பதினெண்மெய்களுள் இதழியைந்து மூக்குவளியாற் பிறக்கும் மகரப்புள்ளி எழுத்து, தனக்குரிய அரைமாத்திரையினின்று குறுகி ஒலித்தலும் உடையதாகும். அதனை ஆராயுமிடத்து அங்ஙனம் ஒலிக்குமிடம் சிறுபான்மையாகும். இசையென்பது ஈண்டு ஒலி என்னும் பொருள்பட நின்றது. குறுகுமிடம் பின்னர்க்கூறப்படுதலின் இது கூறுவாம் என்னும் உத்தி. |
எ-டு :திசையறி மீகானும் போன்ம் எனவும், தரும் வள்ளல் எனவும் வரும். |
குறுகலும் என்னும் உம்மைதொக்கது. ‘அரையளபு’ என்பது செம்பாதி என்னும் பொருள் நயம் தோன்ற நிற்றது. |