சூ. 131 :

இன்னென வரூஉம் வேற்றுமை உருபிற்கு

இன்னென் சாரியை இன்மை வேண்டும்

(29)
 
க-து:

இன்சாரியை பற்றியதொரு மரபு கூறுகின்றது.
 

பொருள் :இன்    என்று  சொல்லப்பட்டு வரும் ஐந்தாம் வேற்றுமை
உருபிற்கு   முன்னர்,   இன்  என்னும்  சாரியை இல்லையாதல் வேண்டும்
என்று கூறுவர் புலவர்.
 

எ-டு:மலையின் வீழ்அருவி, ஊரின் நீங்கினான்  என  உருபு  நிற்கச்
சாரியை இல்லையாதல் கண்டு கொள்க.
 

பாம்பினிற்    கடிது   தேள்,   ‘கற்பினின்     வழா    நற்பலஉதவி’
‘அளவினிற்றிரியாது’   எனவருவனவற்றை இன்னோசைப் பயத்தவாய் வந்த
செய்யுள் முடிபாகக்கொண்டு புறனடையுள் அடக்குக.
 

இவற்றை  ஈண்டே மிகைபடுத்து அடக்குவர் உரையாளர். இன் சாரியை
முழுதும் கெடுதலின் ‘‘அவற்றுள் இன்னின் இகரம்’’ என்னும்   நூற்பாவின்
பின்    இதனை    வையாது,   உருபு   வருங்கால்  சாரியை  வருதலும்
வாராதிருத்தலும் உண்டென்னும் விதிகூறும் சூத்திரத்திற்கு முன்  வைத்தார்
என்க.