சூ. 134 :

காரமும் கரமும் கானொடு சிவணி

நேரத் தோன்றும் எழுத்தின் சாரியை

(32)
 
க-து:

இதுகாறும்   புணர்நிலைமைக்கண்  பெயரும்  வினையுமாகவரும்
சொற்களைப்   பொருந்திவரும்  சாரியைகளையும்     அவற்றின்
இயல்புகளையும்   கூறி,  இனி எழுத்துக்களை  எடுத்தாளுதற்கண்
அவற்றைச்   சொல்நிலையில்    வைத்து    ஆளவேண்டுதலின்
அவற்றிற்குரியவாகவரும்   சாரியைகளைக்       கூறத்தொடங்கி
மெய்யெழுத்துக்கள்  அகரமாகிய  சாரியை பெற்றுவரும் என்பதை
‘மெய்யின்     இயக்கம்      அகரமொடு     சிவணும்’   என
மேற்கூறிவிட்டமையான்  உயிர்  எழுத்துக்கட்குரிய   சாரியைகள்
இவையென  அவற்றின்  பெயரும்  தொகையும்  இச்சூத்திரத்தாற்
கூறுகின்றார்.
 

பொருள்:காரமும்,    கரமும்,     கான்  என்பதனொடு   பொருந்தி
அம்மூன்றும்    எழுத்தின்    சாரியைகளாய்   (அவ்வவற்றிற்கு)   ஒப்பத்
தோன்றிவரும்.
 

இனி,   ஆய்தத்தை அஃகு என்னும் ஒலிப்பாக நிறுத்தி, ஏனம் என்னும்
சொல்லைக் கூட்டி  “அஃகேனம்”   என  வழங்கும்  வழக்கு நோக்கி இது
போன்றவை நேரத் தோன்றாதன எனப் புலப்படுத்துவார் ‘‘நேரத்தோன்றும்’’
என்றார். ஆனம், ஓனம் என்பவை    நேரத்தோன்றா எழுத்துச்சாரியைகள்
என்பார் உரையாளர். அவை   இருவகை வழக்கினும் காணப்பெறாமையான்.
அவர் வரிவடிவைச்சுட்டி ஆனா  ஆவன்னா எனவழங்கும் வழக்குநோக்கிக்
கூறினர் போலும்.   அவ்வழக்குச்    சிறார்க்கு     வரிவடிவைப் பயிற்றும்
இளம்பாலாசிரியன்மார் கூறும் ‘அ’ அன்ன எழுத்து, ‘ஆ’   அன்ன,   ‘இ’
அன்ன,    ‘ஐ’    அன்ன    என்னும்   உவமச்சொல்லின்  மரூஉவாகிய
இழிவழக்கென்க.