சூ. 137 :

ஐகார ஒளகாரம் கானொடுந் தோன்றும்

(35)
 
க-து:

‘நெட்டெழுத்திலவே’   என்றவற்றுள்   ஐகார,  ஒளகாரங்கட்குப்
புறனடை கூறுகின்றது.
 

பொருள்:நெட்டெழுத்துள்   ஐகாரமும்  ஒளகாரமும் காரச்சாரியையே
யன்றி முன்விலக்கப்பெற்ற கான் சாரியையொடும் தோன்றிவரும்.
 

எச்சஉம்மை   இழிவு   தோன்ற நின்றது. இவை மாற்றெழுத்துக்களான்
மாத்திரை குறைதலின் என்க. எ-டு : ஐகான், ஒளகான் எனவரும்.
 

கரம்,   காரம்,    கான்    என்பவை    தமிழடியாக  ஆக்கம் பெற்ற
இடைச்சொற்களேயாம்.     கரம்,    கான்    என்பவை    வடமொழியிற்
பெறப்படாமையறிக. கம், கல், கர், கன் என்பவை இசைக்  குறிப்புணர்த்தும்
உரியடிகளாம். அவற்றுள் ‘கர்’ என்பது உரிமை   சுட்டிவரும் அம் என்னும்
விகுதியொடு கூடி ஒரு சொல்லாக ஆக்கம்  பெற்று  இலக்கணக் குறியீடாக
அமைந்தது. காரம் என்பது அதன்   நெட்டுருவம்.   ‘கன்’  என்பது முதல்
நீண்டு அவ்வளவில் இலக்கணக் குறியீடாக அமைந்ததென்க.