ஒப்பக்கூறல் என்னும் உத்தியான், முழுமகரத்திற்கும் இதற்கும் வரிவடிவின்கண் வேற்றுமை தோன்ற அவ்வெழுத்தகத்தே புள்ளி (கீற்று) அடையாளம் செய்து கொள்ளப்பெறும். எல்லா எழுத்துக்கட்கும் வடிவ இலக்கணங்கூறும் பிறப்பியலுள் இதனைக்கூறாமல் ஈண்டே கூறினர், ஒருவழிக்கூறல் என்னும் உத்திபற்றி என்க. இதனை மொழிமரபின்கண் வையாமல் ஈண்டு வைத்ததற்கும் அதுவே காரணம் என்க. எடுத்துக்காட்டு மேற்காட்டப்பெற்றது. இதன் இக்கால வரிவடிவம்(ம்). இடைக்கால வடிவமும் ஆசிரியர் காலத்து வரிவடிவமும் காணுமாறில்லை. |