சூ. 144 :

ஞநம யவவெனும் முதலாகு மொழியும்

உயிர்முத லாகிய மொழியும் உளப்பட

அன்றி யனைத்தும் எல்லா வழியும்

நின்ற சொல்முன் இயல்பா கும்மே

(2)
 
க-து:

வன்கணம்   ஒழிந்த   கணங்கள்  நின்ற சொல்முன் இருவழியும்
இயல்பாகும் என்கின்றது.
 

பொருள்:  ஞநம  யவ  என்னும்   எழுத்துக்களை  முதலாக உடைய
மொழிகளும், உயிரெழுத்துக்களை முதலாகவுடைய   மொழிகளும்  அடங்க,
அவ்வனைத்துச் சொற்களும் நிறுத்த சொல்லாக  நிற்கும்   இருபத்துநான்கு
ஈறுகளின் முன், வேற்றுமையும் அல்வழியுமாகிய இருவழியினும் இயல்பாகப்
புணரும்.
 

இச்சூத்திரம் பொதுவிதி.  இவற்றுள்   சிலவற்றிற்குச்   சிறப்பு  விதியும்
புறனடையும் மேற்கூறப்படும்.
 

எ-டு:  விள,  பலா, கிளி, குரீ, கடு, பூ, சே, கை, சோ, கௌ,  எனவும்
வரகு  எனவும்  நிறுத்தி  ஞான்றது,  நீண்டது,  மாண்டது,  யாது,  வலிது,
அடைந்தது, ஆடிற்று, இனிது, ஈண்டிற்று, உறு, ஊறிற்று,எழுந்தது, ஏய்ந்தது,
ஐது, ஒன்றிற்று, ஓங்கிற்று, ஒளவியத்தது-என  அல்வழிக்  கண்ணும் ஞாற்சி,
நீட்சி, மாட்சி, யாப்பு,  வலிமை, அடைவு,  ஆட்டம்,  இருக்கை,   ஈட்டம்,
உணர்வு, ஊற்றம், எச்சம், ஏற்றம்,  ஐயம், ஒடுக்கம், ஓக்கம், ஒளவியம் என
வேற்றுமைக்கண்ணும்  வரும்  சொற்களைப்  பொருள் பொருந்தப்புணர்த்தி
உயிரீற்றின் முன்னும் குற்றியலுகரத்தின் முன்னும்   இயல்பாதலைக்  கண்டு
கொள்க.
 

இனிப், புள்ளியீறுகளை உரிஞ், வெரிந், மண், பொன், வேய்,சுடர், கடல்,
தெவ், யாழ்,உதள் என நிறுத்தி ஞான்றது,நீண்டது முதலியவாக மேற்காட்டிய
பதினேழு சொற்களையும்  இருவழியிலும் பொருள்பொருந்தப்    புணர்த்தி
இயல்பாதலைக் கண்டு கொள்க.  இங்ஙனம்  வினைச்சொற்களின்  முன்னும்
ஒப்பனவற்றைக் கூட்டி இயல்பாதலைக் கண்டு கொள்க.
 

இவற்றுள் ஒருசார் சொல்பற்றி வரும் மெல்லினம்  மிகுதலையும்  ணகர,
னகர, லகர, ளகரங்களின் முன்வரும் தகர,நகரம் திரிதலையும் மேற்கூறுவார்.
நிலைமொழி மரபுகளைத் தத்தம் இயல்களுள் எடுத்தோதுவார்.
 

இவ்விலக்கணத்தை   அகத்தோத்தினுள்     கூறின்    நாற்பத்தெட்டு
நூற்பாக்களான்    கூறல்     வேண்டும்.    இதனான்    தொகைமரபின்
இன்றியமையாமை   தெளியப்படும்.  ஏனையவற்றையும் இவ்வாறே அறிந்து
கொள்க.
 

ஆசிரியர், ஞநமயவ என்றும்   உயிர் என்றும் எடுத்துக் கூறியமையான்
நுந்தை என்பதை   வருமொழிக்   குற்றியலுகரத்திற்கு  எடுத்துக்காட்டாகக்
காட்டுதல்  வேண்டாத   ஒன்றாம்.   புணரியற்  கொள்கையின்படி   அது
மெய்ம்முதலாக அடங்குமென்க.