சூ. 145 :

அவற்றுள்

மெல்லெழுத் தியற்கை உறழினும் வரையார்

சொல்லிய தொடர்மொழி இறுதி யான

(3)
 
க-து:

வருமொழி   மென்கணத்திற்கு   எய்தியதன்மேற்  சிறப்பு  விதி
கூறுகின்றது.
 

பொருள்:  மேற்கூறிய இயல்புகணம் மூன்றனுள், மெல்லெழுத்துக்களின்
இயல்பு மேற்கூறியவாறன்றி,மொழிமரபினுட் சொல்லிய மூவகை மொழிகளுள்
தொடர்மொழிகளின் இறுதிக்கண் உறழ்ந்துவரினும் நீக்கார் ஆசிரியர்.
 

எ-டு: வெதிர்ஞ்ஞெரி,     வெதிர்ந்நுனி,    வெதிர்ம்முறி   எனவும்
இதழ்ஞ்ஞெரி, இதழ்ந்நுனி, இதழ்ம்முறி எனவும் வரும்.
 

ஒருசார்  யகர, ரகர, ழகர ஈற்றுச்   சொற்களின்   முன்னர் வன்கணம்
உறழுமெனப் புள்ளிமயங்கியலுள் (சூ-65, 67, 88, 92) கூறப்  பெற்றமையின்,
அவ்வாறே மெல்லெழுத்துக்களும் அவ்ஈறுகளின் முன்னர் உறழ்ந்து வருதல்
உண்டென்று உணர்த்துவராய் வல்லெழுத்துறழ்ச்சி   மூவகை   மொழிக்கும்
பொதுவாகி      நிற்றலின்   ஈண்டுத்   தொடர்மொழிக்கண்  வரும் என
விதந்தோதினார்.    உம்மை  எதிர்மறையாகலின்     மிகாது    வருதலே
வலியுடைத்தாதலறிக.
 

இனிக், கைம்மிகல்,  கைந்நீட்சி,   மெய்ஞ்ஞானம்,   மெய்ந்நிலை  என
ஓரெழுத்தொருமொழி, ஈரெழுத்தொருமொழிக்கண் மிக்கு வருதலை ‘‘ஈறியல்
மருங்கின்’’ என்னும் இவ்வியலின் புறனடையாற் கொள்க.