சூ. 147 :

மொழிமுத லாகும் எல்லா எழுத்தும்

வருவழி நின்ற ஆயிரு புள்ளியும்

வேற்றுமை யல்வழித் திரிபிட னிலவே

(5)
 
க-து:

ணகர னகர ஈறுகட்கு ஆவதோர் அல்வழி முடிபு கூறுகின்றது.
 

பொருள்:  மொழிக்கு     முதலாகும்    எனப்பட்ட  இருபத்திரண்டு
எழுத்துக்களும்    வருமொழி   முதலாக வருமிடத்து,  ஈறாக நின்ற ணகர
னகரமென்ற    அவ்இரண்டு    எழுத்துக்களும்   வேற்றுமையல்லாதவழித்
திரியும்நிலை இலவாம்.
 

எ-டு:  மண்கடிது  -   பொன்கடிது,   சிறிது,  தீது,  பெரிது  எனவும்,
ஞெகிழ்ந்தது, நிறைந்தது, மலிந்தது எனவும், யாது, வலிது எனவும், அழகிது,
ஆயிற்று,  இணைந்தது,  ஈண்டிற்று, உலர்ந்தது, ஊறிற்று,  எளிது,  ஏறிற்று,
ஐதாயிற்று,  ஒத்தது, ஓங்கிற்று,  ஒளவையது  எனவும்  வரும்.  சாட்கோல்
என்பது    பண்புத்தொகையாகலின்   அத்திரிபு   ஈண்டைக்கு   எய்தாது.
புறனடையில் அடங்கும் என்க.