இனி ‘‘மெய்யே அரையள புற்றொலிக் கும்மே’’ என்றாற் போலஅதன் அளவையும் ஒலிக்குமியல்பையும் உடன் கூறாமைக்குக் காரணம், அஃது ஒலிப்பின்றி உருவாதலும், உயிர்ப்பு உந்த அரைமாத்திரையளவு ஒலித்தலும், உயிரியைய இசைத்தலுமாகிய மூன்று நிலைமைகளை உடையதாகலின் என்க. அன்றியும் இவ்வாசிரியர் மெய்யெழுத்திற்குக்கூறும் இலக்கணங்களைச் சார்பெழுத்திற்கும் ஏற்றிக்கூறும் மரபினை மேற்கொண்டாராதலின் ‘‘மெய்யே அரையள புற்றொலிக் கும்மே’’ என்றாற்போலக்கூறின், இதன்பின்னர் மாட்டெறியப்படும் சார்பெழுத்துக்கட்கும் அவ்விதி முழுதும் எய்தும், எய்தின் ஆய்த எழுத்து யாண்டும் புள்ளியாகவே (ஒலிப்புற்றே) வருதலின் ஆய்தம் என்ற முப்பாற்புள்ளி என முன்பு விதந்துகூறப் பட்டமையான், மீண்டுங்கூறின் அது கூறியது கூறலாய் முடியுமாதலானும், குற்றியலிகரம் உயிரைமேவுதலின்மையின் மாறுகொளக் கூறலாய் முடியுமாதலானும் என்க. |