|
சூ. 151 : | உயிரீ றாகிய முன்னிலைக் கிளவியும் | | புள்ளி யிறுதி முன்னிலைக் கிளவியும் | | இயல்பா குநவும் உறழ்பா குநவுமென்று | | ஆயீ ரியல வல்லெழுத்து வரினே | (9) | க-து: | உயிரீறும் புள்ளியீறுமாகிய முன்னிலை வினைச்சொற்கள் வன்கணத்தொடு புணருமாறு கூறுகின்றது. | பொருள்: உயிரெழுத்து ஈறாகி நிற்கும் முன்னிலைவினைச் சொற்களும்,புள்ளி எழுத்து ஈறாகி நிற்கும் முன்னிலை வினைச் சொற்களும், வல்லெழுத்தை முதலாக உடைய சொற்கள்வரின் இயல்பாக முடிவனவும் உறழ்ந்து முடிவனவும் என இரண்டடியல்பினையுடையவாகும். | அடுத்துவரும் சூத்திரத்துள் வினையீறுகளை விதந்து, ‘‘முற்றத் தோன்றா முன்னிலை மொழிக்கே’’ எனக் கூறுதலின் ஈண்டு முன்னிலைக் கிளவி என்றது முன்னிலை வினைச்சொல்லை என்பது பெறப்படும். | முன்னிலை வினைகள் பால்காட்டும் இறுதி இடைச்சொல் பெற்று வருவனவும் முதனிலைத் தொழிற்பெயர்கள் எடுத்தலோசைன் ஈற்றிடைச் சொல் குன்றி வருவனவுமென இரு நிலைமையவாக வரும். | முன்னிலை வினையீறுகளாவன: இ, ஐ, ஆய், இர், ஈர், மின் என வினையியலுள் ஓதப் பெறுவனவாம். முதனிலையளவாக நின்று ஏவற்பொருளுணர்த்துவன: அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ என்னும் உயிரீறுகள் பதினொன்றும் ஞ,ண,ந,ம,ன,ய,ர,ல,ழ,ள, என்னும் புள்ளியீறு பத்தும் குற்றியலுகர ஈறு ஒன்றுமாம். வகரம் தொழிற் பெயர்க்கு ஈறாகாது என்க. | இவற்றுள், ‘‘முற்றத் தோன்றா முன்னிலை மொழிக்கே’’ என விலக்கப் பெறுவன ஒளகாரமும் ஞநம என்னும் புள்ளிகளும் குற்றியலுகரமுமாம். இவையும் அகத்தோத்தினுள் விதந்து கூறப்படுபவையும் ஒழிந்த மற்றவை ஈண்டுக் கொள்ளப்படும். | எ-டு: உண்டி, உண்டனை, உண்டாய் என நிறுத்திக் கொற்றா, சாத்தா, தேவா, பூதா எனக் கூட்டியும் உண்டனிர், உண்டீர்,உண்மின் என நிறுத்திக் கொற்றரே, சாத்தரே, தேவரே, பூதரே எனக் கூட்டியும் வா, தெரி, நகு, வே, வை, போ, உண், தின்,செல், கேள் என நிறுத்திக் கொற்றா, சாத்தா, தேவா, பூதா எனக் கூட்டியும் இயல்பாமாறு கண்டு கொள்க. | இவற்றுள் தகரத்தின் முன் ணனக்களும் லளக்களும் திரியுமாறு அகத்தோத்தினுள் பெறப்படும். | இனி உறழ்ந்து வருவன : நடகொற்றா - நடக்கொற்றா; கூகொற்றா - கூக்கொற்றா எனவும் எய்கொற்றா - எய்க்கொற்றா; ஈர்கொற்றா - ஈர்க்கொற்றா; தாழ்கொற்றா - தாழ்க்கொற்றா எனவும் வரும். | ஏற்புழிக்கோடல் என்பதனான் துக்கொற்றா, நொக்கொற்றா என இவை மிக்கே முடியுமெனக் கொள்க. எகர ஒகரங்கள் மிக்கு முடிதல் உயிர்மயங்கியலுட் கூறப்படும். | இனி நில்கொற்றா, நிற்கொற்றா எனத்திரிந்து உறழ்வனவற்றை ‘‘உறழாகுநவும்’’ என்னும் பொதுவகையான் முடிக்க என்பார் நச்சினார்க்கினியர். நில்கொற்றா என்பது நில்லுகொற்றா என உகரம் பெறுதலே பண்டை வழக்காம். நிற்கொற்றா என்பது பிற்கால வழக்காமென்க. | முன்னிலை வினைகளுள் தொழில் உணர்த்துவனவும் தொழிற்படுத்துவனவும் எனச் சிறுவேறுபாடுடையன உளவேனும், ஆசிரியர் இவற்றை முன்னிலைவினை என்றே வழங்குவர். எனினும் வியங்கோள் வினையுள் ஏவல் கண்ணாதன பலவும் கண்ணுவன சிலவுமாம் என உடம்பொடு புணர்த்தி ஆசிரியர் கூறலான், தொழிற் படுத்துவனவற்றை மட்டும் முன்னிலைவினை எனக் கூறுதல் இந்நூல் நெறிக்கு ஏலாதென்க. | முன்னிலைவினை மூன்று காலமும் பற்றி வரும்.ஏவல்வினை எதிர்காலம் மட்டும் பற்றி வரும். இவையே இவை தம்முள் வேற்றுமையாம். |
|