சூ. 152 : | ஒளஎன வரூஉம் உயிரிறு சொல்லும் |
| ஞநம வென்னும் புள்ளி யிறுதியும் |
| குற்றிய லுகரத் திறுதியும் உளப்பட |
| முற்றத் தோன்றா முன்னிலை மொழிக்கே |
(10) |
‘‘ஞநமவ’’ என்னும் புள்ளியிறுதியும், என்பது உரையாசிரியன்மார் கொண்டுள்ள பாடம். அது பிழையானது என்பது பின்னர்க் கூறப்பெறும். |
க-து: | மேற்கூறிய முன்னிலை வினையீறுகளுள் சிலவற்றிற்கு எய்தியது விலக்கிக் குற்றியலுகரத்திற்கு எய்தாதது எய்துவிக்கின்றது. |
பொருள்: வருமொழி முதலாக வல்லெழுத்து வருங்காலை ‘ஒள’ எனச் சொல்லவரும் உயிரீற்றுச் சொல்லும், ஞநம என்னும் புள்ளியீற்றுச் சொற்களும் அறுவகைக் குற்றியலுகர ஈற்றுச் சொற்களும் அடங்க, அவையாவும் முன்னிலை வினைச் சொற்களாதற்கண் அவை அவ்வீறுகளான் நிறைவுடையனவாகத் தோன்றா. (முற்றுதல் - நிறைதல், நிரம்புதல்) |
மொழிக்கென்பது வேற்றுமை மயக்கம். ஏகாரம் - ஈற்றசை. ‘வல்லெழுத்துவரினே’ என்பது மேலைச் சூத்திரத்தினின்று அதிகரித்தது. ‘முற்றத்தோன்றா’ எனவே ஒளகாரமும் புள்ளியும் குற்றியலுகரமும் சாரியை பெற்றுத் தோன்றும் என்றவாறாம். அச்சாரியை, உகரம் என்பது அகத்தோத்தினுட் பெறப்பட்டது. அவையாவன, ஒளகார இறுதிப் பெயர்நிலை முன்னர்.... உகரம் வருதல் செவ்வி தென்ப (உயிர்மயங்-93) எனவும் ஞகாரை ஒற்றிய தொழிற்பெயர் முன்னர்... உகரம் வருதல் (புள்ளிமய-1) எனவும் நகர இறுதியும் அதனோ ரற்றே (புள்ளி-2) எனவும், தொழிற்பெய ரெல்லாம் தொழிற்பெய ரியல (புள்ளி-32) எனவும், கூறப்பெற்றதொழிற் பெயர்களாம். அவை எடுத்தலோசையான் முன்னிலை வினைச்சொல்லாக வரும். |
எ-டு: கௌவுகொற்றா, வௌவுகொற்றா எனவும், உரிஞு கொற்றா, பொருநுகொற்றா, திருமுகொற்றா எனவும், கூறுகொற்றா, பருகுகொற்றா, அஃகுகொற்றா, விரும்பு கொற்றா, நல்குகொற்றா எனவும் வரும். குற்றியலுகரம் புள்ளியீறு போல உயிரேற்று முடியுமாகலின் நின்றாங்கே நின்று சாரியை உகரத்தை ஏற்று முற்றி நிற்குமென அறிக. கூறு + உ = கூறு என நிற்கும். பிறவும் இவ்வாறே என்று அறிக. |
இவை கௌவுகொற்றா,கௌவுக்கொற்றா என உறழ்ந்தும் வரும் என்னும் உரையாசிரியன்மார் கருத்து மொழியியலுக்குப் பொருந்துமாறில்லை என்க. |
இச்சூத்திரத்துள் வகரத்தையும் சேர்த்து ‘‘ஞநமவ என்னும் புள்ளி யிறுதியும்’’ என யாவரும் பாடங்கொண்டுள்ளனர். ‘‘வகரக் கிளவி நான்மொழி ஈற்றது’’ என்றதனானும் அவற்றுள் அவ், இவ், உவ் என்பவை சுட்டுப் பெயராயும் தெவ் என்பது உரிச் சொல்லாயும் நிற்றலின் அவை முன்னிலை வினையாகாமை தேற்றமாம். தெவ் என்னும் உரிச்சொல் ‘தெவ்வர்’ எனப் பெயராதலன்றித் தெவ்வினான், தெவ்வுவான், தெவ்வு, தெவ்வ என வினையாகாமையும் அறிக. ‘‘ஞநமவென்னும்’’ என நின்ற உடம்படுமெய்யைப் பிறழ் பிரிப்பாகப் பிரித்தமையான் இவ்வழுநேர்ந்ததென்க. அதனை ஓராமல் உரையாசிரியன்மார் தெவ்வு கொற்றா என உதாரணந் தந்தனர். தெவ்வு கொற்றா என்பது கொற்றா! இது பகையாகும் எனப்பொருள் தருவதன்றித் தெவ்வுவாயாக!என ஏவற் பொருள் தாராதென்க. |
இச்சூத்திரத்திற்கு வேங்கடராசுலு ரெட்டியார் கூறும் விளக்கங்கள் ஈண்டைக்கு வேண்டாதன என்க. |