சூ. 154 :

அவற்றுள்

இகர இறுபெயர் திரிபிட னுடைத்தே

(12)
 
க-து:

இகரஈற்றுயர்திணைப்  பெயர்க்கு  எய்தியதன்மேற்  சிறப்பு  விதி
கூறுகின்றது.
 

பொருள்:  மேற்கூறிய        இருவகை    ஈறுகளுள் இகரத்தானிற்ற
உயர்திணைப்பெயர்  திரியுமிட முடையதாகும்.   இடம்   என்றது   ஈண்டு
வேற்றுமை வழியைக் குறிப்பாலுணர்த்தி நின்றது.
 

எ-டு:  நம்பிப்பேறு  எனவரும். இடனுடைத்து என்றதனான் ஏனாதிப்பூ,
காவிதிப்பூ  எனச் சிறப்புப் பெயர்க்கண் மிகுதலும்,உரையிற்கோடல் என்னும்
உத்தியான்  நங்கைக்காடு, நங்கைப்பேறு என ஐகார ஈற்றுப்பெயர் மிகுதலும்
கொள்க. நம்பிக்கொல்லன்,  செட்டிக்கூத்தன், நங்கைப்பெண் எனப் பண்புத்
தொகைக்கண் மிகுதலைப் புறனடையாற் கொள்க.