|
சூ. 155 : | அஃறிணை விரவுப்பெயர் இயல்புமா ருளவே | (13) | க-து: | ஒருசார் விரவுப் பெயர்களின் தன்மை கூறுகின்றது. | பொருள்: அஃறிணைப்பொருள் கருதிவரும் விரவுப்பெயர்கள் இயல்பாதலும் உளவாம். உம்மையான் திரிந்து வருதலும் உளவெனக் கொள்க. | ஒவ்வொரு திணையுள்ளும் பால்பற்றியும் எண்ணுப்பற்றியும் விரவுப் பெயர்கள் உளவாதலின் அஃறிணைப்பொருட்டாய் வரும் விரவுப் பெயர் என்பது விளங்க “அஃறிணை விரவுப் பெயர்’’ என்றார். இனிச் சாத்தன், சாத்தி, கோதை; தாய், தந்தை; மகன், மகள் என இயற்பெயர் முதலாக முறைப்பெயரீறாக வரும் விரவுப் பெயர்களுள் அகத்தோத்தினுள் விதந்து கூறப்பெற்றவை ஒழிந்த ஏனையவற்றை ஈண்டுக் கொள்க. | எ-டு: சாத்தன், சாத்தி, தந்தை என நிறுத்தி; கண்டது,சென்றது, தக்கது, பார்த்தது என அல்வழிக்கண்ணும் கை, செவி, தலை, புறம் என வேற்றுமைக்கண்ணும் இயல்பாதல் கண்டுகொள்க. உம்மையான் சாத்திப்புல், கொற்றிக்கோடு என வேற்றுமைக்கண் மிக்குவருதல் கொள்க. | உயர்திணைப் பெயர்கள் மேல் விதந்து கூறப்பெற்றமையான் சாத்தன், குறியன், சிறியன் என நச்சினார்க்கினியர் காட்டும் உதாரணமும் விளக்கமும் பொருந்தாமையறிக. |
|