சூ. 156 : | புள்ளி இறுதியும் உயிரிறு கிளவியும் |
| வல்லெழுத்து மிகுதி சொல்லிய முறையான் |
| தம்மி னாகிய தொழிற்சொல் முன்வரின் |
| மெய்ம்மை யாகலும் உறழத் தோன்றலும் |
| அம்முறை இரண்டும் உரியவை உளவே |
| வேற்றுமை மருங்கிற் போற்றல் வேண்டும் |
(14) |
க-து: | மூன்றாம் வேற்றுமைப் புணர்ச்சிக்கண் நிகழ்வதோரிலக்கணம் கூறுகின்றது. |
பொருள்: அகத்தோத்தினுள் புள்ளியீற்றுச் சொல்லும் உயிரீற்றுச் சொல்லும் வேற்றுமைப் புணர்ச்சிக்கண் வல்லெழுத்து மிகுமெனச் சொல்லிய முறைமையானே, மூன்றாம் வேற்றுமைப் பொருள் பற்றி வரும் தம்மின் உளவாகிய வினைச்சொல், குறித்து வருகிளவியாய் வரின், வல்லெழுத்துப் பட்டாங்கு (இயல்பு) ஆதலும், உறழ்ந்து தோன்றலும் ஆகிய அம்முறைமை இரண்டும் உரியவாக உள. ஆதலின் அவ்வேற்றுமையிடத்து அவற்றைப் போற்றிக் கொள்ளல் வேண்டும். |
மூன்றாம் வேற்றுமைக்கு ஓதப்பட்ட ‘‘அதன்வினைப்படுதல்’’ என்னும் பொருள்பற்றி வருங்கால் இம்முறைமை நிகழ்தலின் ‘வேற்றுமை மருங்கின்’ என்றும், யாண்டும் வாராமையின் ‘உரியவை உளவே’ என்றும், இவைமிகும் இவை உறழும் என்பதனை நுணுகியறிதல் வேண்டுதலின் ‘‘போற்றல் வேண்டும்’’ என்றும் கூறினார். |
எ-டு: நாய்-புலி என நிறுத்திக் கோட்பட்டான், சாரப்பட்டான், தீண்டப்பட்டான், பாயப்பட்டான் எனக் கூட்டி இயல்பாதலையும் சூர்-வளி என நிறுத்திக் கோட்பட்டான் முதலியவற்றைக் கூட்டி சூர் கோட்பட்டான், சூர்க்கோட்பட்டான் என உறழ்வாதலையும் கண்டு கொள்க. |
இனி, நச்சினார்க்கினியர் புள்ளியிறுதி, உயிரிறுகிளவி என்றதனான் பேய்கோட்பாட்டான், பேஎய்க் கோட்பாட்டான் என உறழ்ச்சியோடு வரும் எகரப்பேறும் கொள்க என்பார். புள்ளியிறுதி உயிரிறு கிளவி என்பவை யாங்ஙனம் மிகையாகும்? இசைகருதி வரும் ஏகார நீட்சியைப் புணர்ச்சி விகாரமாக்குதல் எங்ஙனம் பொருந்தும்? மற்றும் அம்முறை இரண்டும் “உரியவை உளவே” என்பதனான் பாம்பு கோட்பட்டான், பாப்புக்கோட்பட்டான் எனவரும் உறழ்ச்சியுள் நிலைமொழி ஒற்றுத் திரிதலும் கொள்க என்பார். இவை குற்றியலுகரப் புணர்ச்சி யாகலான் மென்றொடராய வழி இயல்பாதலும் வன்றொடராய வழி மிகுதலும் அவ்வீற்று இலக்கணமாம். அவற்றை ஈண்டு அமைப்பது இயைபுடைத்தன்றென்க. |