சூ. 157 :

மெல்லெழுத்து மிகுவழி வலிப்பொடு தோன்றலும்

வல்லெழுத்து மிகுவழி மெலிப்பொடு தோன்றலும்

இயற்கை மருங்கின் மிகற்கை தோன்றலும்

உயிர்மிக வருவழி உயிர்கெட வருதலும்

சாரியை உள்வழித் தன்னுருபு நிலையலும்

சாரியை இயற்கை உறழத் தோன்றலும்

உயர்திணை மருங்கின் ஒழியாது வருதலும்

அஃறிணை விரவுப்பெயர்க் கவ்வியல் நிலையலும்

மெய்பிறி தாகிடத்து இயற்கை யாதலும்

அன்ன பிறவும் தன்னியல் மருங்கின்

மெய்பெறக் கிளந்து பொருள்வரைந் திசைக்கும்

ஐகார வேற்றுமைத் திரிபென மொழிப

(15)
 
க-து:

அகத்தோத்தினுள்  வேற்றுமைப்  பொருட்புணர்ச்சிக்கு   ஓதிய
விதிகளினின்று   இரண்டாம்  வேற்றுமை  எய்தும் திரிபுகளைத்
தொகுத்துக் கூறுகின்றது.
 

பொருளும் விளக்கமும் :
 

1) மெல்லெழுத்து  மிகுவழி  வலிப்பொடு தோன்றலும் = மெல்லெழுத்து
மிக   வேண்டுமிடத்து     வல்லெழுத்துத்   தோன்றி   வருதலும். எ-டு:
விளங்கோடு (உயிர்-217) என வருவது, விளக்குறைத்தான் எனவருதலும்
 

2) வல்லெழுத்து   மிகுவழி  மெலிப்பொடு தோன்றலும் = வல்லெழுத்து
மிக வேண்டுமிடத்து மெல்லெழுத்துத் தோன்றி வருதலும். எ-டு:மரக்குறை
எனவருவது, மரங்குறைத்தான் என வருதலும்
 

3) இயற்கை மருங்கின் மிகற்கை  தோன்றலும் = திரிபின்றி   இயல்பாக
வேண்டுமிடத்து மிக்குத்தோன்றி வருதலும். எ-டு:தாய் பகை எனவருவது, தாய்ப்பகைத்தான் என வருதலும்
 

4) உயிர்மிக    வருவழி    உயிர்கெடவருதலும்   =    உயிரெழுத்து
மிக்குவரவேண்டுமிடத்துக் கெட்டு வருதலும். எ-டு: பலாஅக்கோடு  என
வருவது பலாக்குறைத்தான் எனவருதலும்
 

5) சாரியை   உள்வழிச்  சாரியை   கெடுதலும் = சாரியை   உளதாதல்
வேண்டுமிடத்துச்   சாரியை   இன்றி    வருதலும். எ-டு:வண்டின் கால்
எனவருவது   வண்டு   கொணர்ந்தான்    எனவருதலும் ஆன்கன்று என
எழுத்துப் பெற்று வருவது ஆக்கொணர்ந்தான் எனக்கெட்டு வருதலும்
 

6) சாரியை   உள்வழித்  தன்னுருபு  நிலையலும்  =  சாரியை கெடாது
நிற்குமிடத்துத் தன் உருபாகிய வடிவு நிலைபெறுதலும். எ-டு:  ஆவினைக்
கொணர்ந்தான் - மரத்தை வெட்டினான் எனவருதலும்
 

7) சாரியை   இயற்கை    உறழத்   தோன்றலும்  =  சாரியை  பெறும்
இயல்புள்ளவை    சாரியை பெறாமல் இயல்பாக நிற்குமிடத்து வல்லெழுத்து
உறழ்ந்து  தோன்றுதலும். எ-டு:புளியங்கோடு, பூலங்கோடு என வருபவை
புளிகுறைத்தான்,    புளிக்குறைத்தான்;  பூல்குறைத்தான்,   பூற்குறைத்தான்
எனவருதலும்
 

8) உயர்திணை    மருங்கின்   ஒழியாது  வருதலும்  =  உயர்திணைப்
பெயரிடத்துத் தன் உருபு (வடிவு) மறையாது வருதலும். எ-டு:   நம்பியைக்
.கொணர்ந்தான், அவனைக் கண்டான், மகனைப்   பெற்றான்.  நங்கையைப்
பெற்றான் எனவருதலும், உருபுதவிர்ந்தவழி   எழுவாய்   வேற்றுமையாய்ப்
பொருள் கவர்படுமாதலின் ஒழியாது வருமென   வலியுறுத்தப்பட்டது. இனி
ஆடூஉவறிசொல்,   ‘மழவரோட்டிய’ என  ஒழிந்தும்   வந்தனவால்எனின்?
ஆடூஉவறிசொல், பல்லோர் அறிசொல் என்பவை ஒரு சொல் நீர்மையுற்றுத்
தொகைச்சொல்லாய்ப் பாலறிய நிற்பவை  ஆதலின் அவற்றை நிலைமொழி
வருமொழி    செய்து   பிரித்தல்   மரபன்றென்க.     மழவர்   ஓட்டிய
என்றாற்போல்வன செய்யுள் விகாரமாக  வந்தனவாம்.  உரையாசிரியன்மார்
‘‘ஒழியாது’’ என்பதனை மிகையாக்கி அதனான் இவற்றை அடக்குவர். அஃது
ஆசிரியர் கருத்திற்கு ஒவ்வாதென்க.
 

9) அஃறிணை  விரவுப்பெயர்க்   கவ்வியல் நிலையலும் = அஃறிணைப்
பொருட்கண்  வரும்  விரவுப்  பெயர்க்குத் தன் உருபு ஒழியாது வருதலும்
என்னும் இலக்கணம் நிலைபெறுதலும். எ-டு: கொற்றனைக்  கொணர்ந்தான்,
தந்தையைக் கண்டான் எனவரும். ‘‘மெய்பெற’’  என்றதனான்  சிறுபான்மை
மகப்பெற்றான், தாய் போற்றினான் எனக்  கவர்பொருள் படாது வருமிடத்து
உருபின்றி வருதலும் கொள்க.
 

10) மெய்பிறிதாகிடத்து    இயற்கையாதலும்   =    மெய்பிறிதாதலாகிய
திரிபு பெற்று வரவேண்டுமிடத்துத் திரியாமல் இயல்பாக  வருதலும். எ-டு:
மட்பகை, பொற்பகை என ஏனைய வேற்றுமையிடத்துத் திரிபவை இதன்கண்
மண்கொணர்ந்தான், பொன்பெற்றான் என வருதலும்
 

அன்னபிறவும்  =  அவைபோல்வன  பிறவும் திரிந்து வருதலும். எ-டு:
எற்கண்டு,நப்புணர்ந்தான் எனத்தொடக்கங்குறுகும் பெயர்கள் உருபொழிந்து
திரிந்தும், தினை பிளந்தான், கணை  தொடுத்தான்,   மயிர்   குறைத்தான்
என்பவை    உறழாது     இயல்பாய்     வருதலும்,     பிறவாறுவரினும்
கவர்பொருள்படாமல் வருதலும்,
 

தன்னியல் மருங்கின்  மெய்பெறக்கிளந்து   பொருள்வரைந்  திசைக்கும்
ஐகார வேற்றுமைத் திரிபென மொழிப =தான் நிலை மொழியொடு பொருந்த
நடக்குமிடத்து வினையும் வினைக்குறிப்புமாகிய  தனது பொருளைக்கிளந்து,
நிலைமொழிப் பொருளை  வரையறை    செய்து  இசைக்கும்   இரண்டாம்
வேற்றுமையினது திரிபெனக் கூறுவர் புலவர்.
 

‘‘தோன்றலும் நிலையலும் ஆதலும்   அன்னபிறவும்  ஐகாரவேற்றுமைத்
திரிபென மொழிப’’ என முடித்துக் கொள்க.
 

இரண்டாம்   வேற்றுமைத்    திரிபினைப்   பிற்கூறியதனான் ஏழாவது
வினையொடு   முடியும்   வழிச் சிறுபான்மை வரைபாய் வருடை, புலம்புக்
கனனே புல்லணற்காளை   என  இயல்பாக   வருதலும்  சாரியை பெறாது
வருதலும் கொள்க.