சூ. 159 : | சுட்டுமுத லாகிய இகர இறுதியும் |
| எகரமுதல் வினாவின் இகர இறுதியும் |
| சுட்டுச்சினை நீடிய ஐயென் இறுதியும் |
| யாவென் வினாவின் ஐயென் இறுதியும் |
| வல்லெழுத்து மிகுநவும் உறழா குநவும் |
| சொல்லிய மருங்கின் உளவென மொழிப |
(17) |
க-து: | சுட்டு, வினா இவற்றின் அடிப்படையிற் பிறந்த இடப்பெயர்கட்காகும் விதி கூறுகின்றது. |
பொருள்: சுட்டெழுத்தினை முதலாகக் கொண்ட இகர ஈற்றுச் சொற்களும், எகரத்தை முதலாகக் கொண்ட இகரஈற்று வினாச் சொல்லும் சுட்டெழுத்தாகிய உறுப்பு நீண்ட ஐகாரஈற்றுச் சொற்களும், யாவென்னும் வினாவை முதலாக உடைய ஐகார ஈற்றுச் சொல்லும், மேலே இகர ஐகார ஈற்றுக்குச் சொல்லியாங்கு வல்லெழுத்து மிக்கு வருவனவும் உறழ்ந்து வருவனவும் உள என்று கூறுவர் ஆசிரியர். |
‘‘சொல்லிய’’ என்றது மேலைச் சூத்திரத்தும் அகத்தோத்துள்ளும் கூறப்பெற்ற இலக்கணங்களை. அகத்தோத்தினுள் சுட்டுப்பெயரும் வினாப்பெயரும் நாற்கணத்தொடும் புணருமாறு கூறப்பெற்றது. ஈண்டுச் சுட்டு, வினாக்களை முதலாக உடைய இடப்பெயர்களைத் தொகுத்து விதி கூறுகின்றது. |
எ-டு: 1. அதோளிக் கொண்டான், இதோளிக் கொண்டான், உதோளிக் கொண்டான், எதோளிக்கொண்டான், சென்றான், தந்தான், போயினான் என இவை மிக்குவந்தன. ஆண்டைக் கொண்டான், ஈண்டைக் கொண்டான் என இவை மிக்கு வந்தன. ஊண்டை, யாண்டை என்பனவற்றொடும் இவ்வாறே ஒட்டிக்கொள்க. |
2. அவ்வுழி கொண்டான், அவ்வுழிக் கொண்டான் என இவை உறழ்ந்து வந்தன. இவ்வுழி, உவ்வுழி என்பனவற்றொடும் ஒட்டிக் கொள்க. |
இனிச் சுட்டுச் சினை நீடிய ஐயென் இறுதிக்கு ஆங்கை, ஈங்கை,ஊங்கை என்றும், யாவென் வினாவின் ஐயென் இறுதிக்கு யாங்கை என்றும் சொற்கள் வழங்கியிருத்தல் வேண்டும். என்னை? ஆங்கு, யாங்கு என்னும் குற்றுகர ஈற்று இடப்பெயர்கள் உண்மையான். ஆண்டு,யாண்டு என்பவை ஆண்டை, யாண்டை என வந்தாற்போல அவை ஆங்கை, யாங்கை என வருதற்கு ஏற்குமாதலின் என்க. |
மற்று ‘‘இனியணி என்னும் காலமும் இடனும்’’ எனவும் ‘அன்றி யனைத்தும் பெயர்ப்பய னிலையே’ எனவும் ஆசிரியர் கூறுதலான்.அனி, இனி, உனி எனவும் அன்றி, இன்றி, உன்றி எனவும் சுட்டு முதலாகிய இகர ஈற்றுச் சொற்கள் அருகிய வழக்காக ஆசிரியர் காலத்து வழங்கியிருக்கக் கூடும். எனினும் பின்னவை சுட்டுப் பொருளின்றி இடப்பொருளில் வழங்காமை ஐயத்திற்கிடனாக உளது. |