|
சூ. 16 : | ‘‘எகர ஒகரத் தியற்கையு மற்றே’’ | (16) | இஃது உரையாசிரியன்மார் கொண்ட பிழையான பாடம். இந்நூல் நெறிக்கியைந்த பாடம் | | இகர உகரத் தியற்கையு மற்றே | க-து: | மேற்கூறிய மெய்யெழுத்தின் இயல்பினைக் குற்றியலிகரமும் குற்றியலுகரமும் பெறுமென்கின்றது. | பொருள்: சார்பெழுத்து மூன்றனுள் ‘‘முப்பாற்புள்ளி’’ என ஓதப்பெற்ற ஆய்தம் தவிர்ந்த ஏனைய குற்றியலிகரம்-குற்றியலுகரம் ஆகியவற்றின் இயல்பும் மெய்யெழுத்திற்குக்கூறிய அவ்வாறேயாம். | அஃதாவது இவையும் அரைமாத்திரை அளவு புள்ளி பெற்று ஒலிக்கும் என்றவாறு. வரிவடிவின்கண் அடையாளம் செய்து கோடல் இவற்றிற்கும் ஒக்கும். | எ-டு :நாகியாது-கேண்மியா எனவும், அரசாட்சி நாடு எனவும் வரும். | ‘‘அவ்வியல் நிலையும் ஏனைமூன்றே’’ என்பது அதிகாரப்பட்டு வருதலின் இகர உகரமென வாளா கூறினார். இவ்வாறே, | | ‘‘யகரம் வரும்வழி இகரங் குறுகும் | | உகரக் கிளவி துவரத் தோன்றாது’’ |
எனக்குற்றியலுகரப் புணரியலுள் குற்றியலுகரம் அதிகரித்து நிற்றலான் குற்றியலிகரம், குற்றியலுகரம் என்னாமல் இகரமென்றும் உகரக்கிளவி என்றும் வாளா கூறுவதைக் காண்க. | ஆய்த எழுத்துப் புள்ளிபெறும் என்பது இரண்டாம் சூத்திரத்தாற் பெறப்பட்டமையான் அதனை நீக்கி ஏனைய இரண்டினையும் மாட்டெறிந்து கூறினார் என்க. | இனி, இப்பாடம் பிறழ்ந்தமைக்குக் காரணம் ‘‘மெய்யின் இயற்கை புள்ளியொடு நிலையல்’’ என்னும் சூத்திரம் வரி வடிவிற்கே இலக்கணங்கூறுவதாகக் கொண்ட கொள்கையானும் இவ்இகர, உகரங்களைச் சார்பெழுத்தாகக் கருதாமல் உயிரெழுத்தாகக் கருதியமையான் அவை புள்ளிபெறுதற்கு இயைபில்லை என மயங்கியமையானும், வடமொழியுள் இல்லாதனவாய்த் தமிழின்கண் உள்ள எகர ஒகரங்களின் (நெடிலுக்கும் குறிலுக்கும்) வடிவுபற்றியே விதி கூறுவதாக எண்ணி உரையாசிரியரோ, அவர்க்குமுன் பாடஞ்சொன்னவரோ மெய்ம்மையான பாடத்தைத்திருத்தி ‘‘எகர ஒகரத் தியற்கையு மற்றே’’ என அமைத்திருக்கலாம். | எகர ஏகாரங்களின் வடிவம் ஒன்றுபோல இருந்தமையான் குறிலின் அடையாளமாக இவற்றை ஆசிரியர் கூறியுள்ளார் என்பர் ஒருசாரார். அங்ஙனமாயின் பிற குறில் நெடில்களை எங்ஙனம் வேறுபடுத்தியிருப்பர்? அந்நெறி எகர ஏகாரங்களுக்கு எய்தாது போவானேன்? வடமொழி எழுத்துக்களை அப்படியே தமிழின்கண் அமைத்துக் கொண்டனர் என்றும் ஆண்டில்லாத எகர ஒகரங்களை ஏகார ஓகாரங்களை வைத்தே வேறுபடுத்திக் கொண்டனர் என்றும் தமிழ் இலக்கணமெல்லாம் வடமொழியைப் பின்பற்றி அமைந்தவையே என்றும் கருதினமையே, இப்பிறழ்ச்சிக்குக் காரணம் என்க. இது நிற்க. | மெய்யெழுத்திற்கு ஓதப்பெறும் இலக்கணங்களைச் சார்பெழுத்துக்கும் மாட்டெறிந்துகூறும் இவ்வாசிரியர் கோட்பாட்டினை இதற்குமுன்பு ‘‘மெய்யின் அளபே அரையென மொழிப’’ எனக் கூறி அதன்பின் ‘‘அவ்வியல் நிலையும் ஏனை மூன்றே’’ என்றதனானும், இனிப்பின்னர் ‘‘மெய்யீ றெல்லாம் புள்ளியொடு நிலையல்’’ எனக்கூறிச் சார்பெழுத்துக்களுள் ஈறாக வருவதற்குரிய குற்றியலுகரத்தை மட்டும் விதந்து ‘‘குற்றியலுகரமும் அற்றெனமொழிப’’ என்றும், பின்னரும் “ஒள என வரூஉம் உயிரிறு சொல்லும், ஞநம வென்னும் புள்ளி யிறுதியும் குற்றிய லுகரத் திறுதியும் உளப்பட” (தொகைமரபு-10) என்றும் கூறுதலானும், புள்ளிமயங்கியலுக்குப் பின்னர்க் குற்றியலுகரப் புணரியலை வைத்துக் கூறுதலானும் அறியலாம். |
|