சூ. 160 :

நெடியதன் முன்னர் ஒற்றுமெய் கெடுதலும்

குறியதன் முன்னர்த் தன்னுருபு இரட்டலும்

அறியத் தோன்றிய நெறியிய லென்ப

(18)
 
க-து:

ஒற்றீறுகள் பற்றியதொரு பொதுவியல்பு கூறுகின்றது.
 

பொருள்:  நெட்டெழுத்தின்       முன்னிற்கும்    ஒற்றுக்கெடுதலும்,
குற்றெழுத்தின்   முன்னிற்கும்   ஒற்றுத்  தன்வடிவு இரட்டுதலும், யாவரும்
அறியுமாறு வந்த நெறிப்பட்ட இலக்கணமென்று கூறுவர் நூலோர்.
 

நெடியதன்  முன்னர்க்கெடுதல்  லகர, ளகர, ணகர, னகரமாகிய  புள்ளி
எழுத்துக்கள் என்பதும்,  அவை  வருமொழி   முதலாகத்  தகர நகரங்கள்
வருமிடத்தென்பதும்,  அவ்வாறே  நெடியதன்  முன்னிற்கும்  மகரப் புள்ளி
வருமொழி  மெல்லெழுத்து  வருமிடத்தும்  கெடும்  என்பதும்,  நெடியதன்
முன்னிற்கும்  யகரப்  புள்ளி  சிறுபான்மை  வருமொழி  யகரத்தின்  முன்
கெடும்  என்பதும்,  அவ்வழித்  ‘‘தொடர்மொழி   யெல்லாம் நெட்டெழுத்
தியல’’   என்பதனால்  தொடர்  மொழியீற்றுப்  புள்ளிகளும்  இவ்விதியை
ஏற்கும்   என்பதும்,   இரட்டுதல்   வருமொழி   முதல்   உயிர் எழுத்து
வருமிடத்து  என்பதுமாகிய இவ்விதிகள் எல்லாம் முன்னும் பின்னும் உள்ள
இலக்கணங்களான்  அறிய  நிற்றலின்  ‘‘அறியத்  தோன்றிய  நெறியியல்’’
என்றார்.
 

எ-டு:  1. கோறீது,  வாடீது   எனவும்  கோனன்று, வாணன்று எனவும்
தேனன்று,  நாணன்று  எனவும், தாநல்லர், நோயாது எனவும் வரும். இவை
நெடில்முன்   ஒற்றாய்   நின்று   கெட்டன. வரறீது, பொருடீது, வரனன்று,
பொருணன்று,    கலனன்று,    பரணன்று   எனவரும் தொடர் மொழிகள்
நெட்டெழுத்தியல்பினவாய்         நிற்க     அவற்றின்கண்   கெட்டன.
‘‘அறியத்தோன்றிய’’  என்றதனான்  மேற்றிசை,  வாட்டடங்கண், குறட்டுறை
எனச் சிறுபான்மை கெடாது வருதலும் ஆம்.
 

2) மண்ணினிது,  மண்ணழகு,  பொன்னகல்,  பொன்னழகு,  நும்மரசன்,
நெய்யகல், சொல்லினது, தெவ்வலன்,புள்ளெழுந்தது எனவருமிவை இரட்டின.
பிறவும் இவ்வாறே ஒட்டிக் கொள்க.
 

(ஒருமொழிப்     புணர்ச்சியாய சொல்லாக்கத்தின்கண் இந்நியதியின்றி
வருமாதலின் அவைபற்றி மயங்கற்க)