சூ. 162 :

நும்மென் இறுதியும் அந்நிலை திரியாது

(20)
 
க-து:

நும் என்னும் பெயர்க்கு அவ்விதியை எய்துவிக்கின்றது.
 

பொருள்: நும்    என்னும்    முன்னிலைப்பன்மைப்    பெயரிறுதியும்
மேற்கூறிய இலக்கணத்தின் மாறுபடாது.
 

எ-டு: நுமது,   நுமக்கு   எனவரும்.   நும்    என்பது   சாரியையாக
வருதற்கண்ணும் இவ்விதி கொள்க. அது எல்லீர் நுமதும், எல்லீர்  நுமக்கும்
எனவரும்.
 

இவ்இரு    சூத்திரங்களிற்   கூறப்பெற்ற சொற்களின்முன் ஏனை உயிர்
முதலாகிய உருபுகள்வரின் பொது விதிப்படி நிலைமொழி ஒற்று இரட்டுமென
அறிக. எ-டு: என்னை, எம்மை, என்னொடு, எம்மொடு, என்னின்,  எம்மின்,
என்னான், எம்மான், என்னுள், எம்முள்,  நும்மை,  நும்மொடு   எனவரும்.
பிறவும் அன்ன.