சூ. 163 :

உகரமொடு புணரும் புள்ளி யிறுதி

யகரமும் உயிரும் வருவழி இயற்கை

(21)
 
க-து:

சாரியை   உகர   எழுத்துப்  பெறும் ஒருசார் புள்ளியீறுகளுக்கு
ஒருவழி எய்தியது விலக்குகின்றது.
 

பொருள்: அகத்தோத்தினுள்   உகரம்பெற்று வருமொழியொடு புணரும்
எனப் பெற்ற தொழிற்பெயர்,  அஃறிணைப்பெயர்,  பெயர்ப்  பொருட்டாய்
வரும்  வகர  ஈற்று  உரிச்சொல் ஆகியவற்றின்  புள்ளியீறுகள் வருமொழி
முதலாக யகரமும் உயிரும் வருமிடத்து உகரம்பெறாது இயல்பாகப் புணரும்.
 

அவ் ஈறுகளாவன : ஞ், ண், ந், ம், ல், ள், ன், வ் என்பவையாம்.உரிஞ்,
முரண், பொருந், திரும், முரல், அருள்,   தின்   என்பவை   முதனிலைத்
தொழிற்பெயர். வெரிந், உரும், நெல்,  புள்,  மின்  என்பவை அஃறிணைப்
பெயர்.   தெவ்   என்பது   உரிச்சொல்   பெயர்ப்பொருட்டு.   இவற்றை
நிலைமொழியாக நிறுத்தி யாது, அழகு,ஆவது, இனிது, ஈது, உகந்தது, ஊறு,
எளிது, ஏற்றது, ஐது, ஒக்கும்,ஓங்கியது, ஒளவியத்தது எனப் பொருந்துமாறு
கூட்டி இயல்பாமாறு கண்டு கொள்க.