சூ. 165 :

அரைஎன வரூஉம் பால்வரை கிளவிக்குப்

புரைவ தன்றாற் சாரியை இயற்கை

(23)
 
க-து:

அரை   என்னும்   அளவுப்  பெயர்வரின்  மேல் எய்தியதனை
விலக்குகின்றது.
 

பொருள்:  மேற்கூறிய   அளவைப்   பெயர்களின்முன்  அரை என்று
சொல்லப்பட்டு   வரும்  ஒருபொருளின்   செம்பாதியை வரைந்துணர்த்தும்
சொல்லிற்கு இடையே, ஏ என்னும் சாரியை பெறும் இலக்கணம்  ஒப்பதன்று
எனக் கூறுவர் புலவர்.
 

எ-டு:  உழக்கரை,  செவிட்டரை;  கழஞ்சரை,   கஃசரை,  தொடியரை,
கொள்ளரை;  ஒன்றரை,  பத்தரை எனவரும் இவற்றுக்கு உம்மை விரித்துப்
பொருள்  கொள்க.  கலவரை,  செவிட்டரை என்பவற்றின்  நிலைமொழித்
திரிபை   ஈண்டுப்   ‘‘புரைவதன்று’’ என்பதனை  மிகையாக்கி  அதனான்
முடிப்பார்    உரையாளர்.   அவை  (புள்ளிமய-24,   குற்றுகரப்புண-20)
அகத்தோத்தின்  விதிப்படி  முடிவனவாகலின்ஈண்டு அடக்குதல் வேண்டா
என்க.