சூ. 17 :

புள்ளி யில்லா யெல்லா மெய்யும்

உருவுரு வாகி அகரமொடு உயிர்த்தலும்

ஏனை உயிரொடு உருவுதிரிந் துயிர்த்தலும்

ஆயீ ரியல உயிர்த்த லாறே

(17)
 

க-து:

உயிர்மெய்யெழுத்துக்கள்  தோன்றி  உருவாகி உயிர்த்திசைக்குமாறும்
அவை உருத்திரியுமாறும் கூறுகின்றது.
 

பொருள்:  மெய் பதினெட்டும் ஒலிப்பில்லனவாய்த்  தத்தமக்கு  உரிய
பிறப்பிடங்களில்    தனித்தனி    உருவாகி    நின்று      உயிர்ப்பொடு
வெளிப்படுங்கால், அகரஉயிரைத் துணைக்கொண்டு உயிர்க்குமிடத்துத்  தம்
உருத் திரியாமல்  இசைத்தலும்,  ஏனைய  உயிர்களைத்  துணைக்கொண்டு
உயிர்க்குங்கால் (அவ்வுயிர்கட்கு ஏற்பத்) தம் உருச் சிறிது திரிந்திசைத்தலும்,
என  உயிர்மெய்  எழுத்துக்கள்  இசைக்கும்   முறைமையான்   இருவகை
இயல்பினை உடையவாம்.
 

‘உயிர்த்தலாற்றான்’    என்பது     ‘‘உயிர்த்தலாறு’’      எனநின்றது.
எல்லாமெய்யும்   உருவாகி  உயிர்த்தலாறு  ஈரியல  எனக்கூட்டி  முடிக்க.
உயிரொடு   கூடியிசைக்குங்கால்   புள்ளி   இலவாகும்   என்னும்   விதி
மாட்டேற்றான் குற்றியலுகரத்திற்கும் எய்தும். வரிவடிவினும்  அகரம்  கூடிய
உயிர்மெய்க்கும்  ஏனைய  உயிர்கள் கூடிய  உயிர்மெய்க்கும்   அடையாள
வேறுபாடு செய்துகொள்ளப்பெறும்.
 

ஒலிவடிவை     இசைத்துச்      செவியாலுணர்க.    வரிவடிவத்திற்கு
எடுத்துக்காட்டு: க, ங, ச.....ன  எனவும் கா, கி, கு, கூ, கெ, கே,  கை, கொ,
கோ, கௌ எனவும் வரும். இவை இக்கால வரிவடிவம். ஏனையவும் வழக்கு
நோக்கிக்கொள்க.
 

ஏனைய உயிரொடு உயிர்க்குங்கால் பதினொரு வேறுபாடு எய்துமாயினும்
அவற்றையெல்லாம்   திரிபு  என  ஒன்றாக  அடக்கி   ஈரியல  என்றார்.
இதனானும்     உயிர்மெய்யெழுத்து      ஓரெழுத்தாதல்      புலப்படும்;
ஓரெழுத்தாயினும்   புணர்ச்சியின்கண்   ஒற்றொலியும்    உயிரிசையுமாகக்
கொள்ளப்படும். புணர்ச்சி என்பது எழுத்தொலி மயக்கமாதலின் என்க.