சூ. 170 :

அளவிற்கும் நிறையிற்கும் மொழிமுத லாகி

உளவெனப் பட்ட ஒன்பதிற் றெழுத்தே

அவைதாம்,

கசதப என்றா நமவ என்றா

அகர உகரமொடு அவையென மொழிப

(28)
 
க-து:

அளவுப்பெயர்கட்கு    முதலாகி     வரும்     எழுத்துக்களை
வரையறுக்கின்றது.
 

பொருள்: அளவுப்பெயர்கட்கும்    நிறைப்   பெயர்கட்கும்   மொழி
முதலாகி வருவனவாயுள்ளவை எனத்   தொல்லாசிரியரான்   வரையறுத்துக்
கூறப்  பெற்றவை ஒன்பது எழுத்துக்களேயாம். அவையாவன; கசதபக்களும்,
நமவக்களும்,அகரமும் உகரமும் ஆகிய அவை என்று சொல்லுவர் புலவர்.
 

எ-டு: கலம்,  சாடி,   தூதை,  பானை, நாழி,  மண்டை, வட்டி, அகல்,
உழக்கு என்பவை   முகத்தலளவைப்பெயர்கள்.   இவற்றை அளவுப் பெயர்
எனவாளா கூறுவர். கழஞ்சு, சீரகம், தொடி, பலம், நிறை, மா, வரை,அந்தை
என்பவை    நிறைப்    பெயர்கள்.    உகரம்  முதலாகிய நிறைப் பெயர்
புலனாகவில்லை.உழுந்து என்பதை வழங்கியிருக்கலாம் என்பது உரையாளர்
உரைகளாற் புலனாகின்றது. ‘எனப்பட்ட’ என்பதனான் இம்மி,இடா, ஓரெடை
என வழங்குவனவும் உளவெனக் கொள்க.
 

அளவைப் பெயர்களின்   முதலெழுத்துக்களைத்    தொகுத்தோதியதன்
பயன், அகத்தோத்தினுள் அளவைப் பெயர் பற்றிய  விதி  கூறுமிடங்களில்
அதிகாரத்தான் வரும் வன்கணத்தோடு ஏனைக்   கணங்களுக்கும் அவ்விதி
செல்லும் என்பதை உணர்த்துதலாம்.