சூ. 171 :

ஈறியல் மருங்கின் இவை இவற் றியல்பெனக்

கூறிய கிளவிப் பல்லா றெல்லாம்

மெய்த்தலைப் பட்ட வழக்கொடு சிவணி

ஒத்தவை உரிய புணர்மொழி நிலையே

(29)
 
க-து:

மூவகை    ஈறுகளும்  நின்று புணரும்  புணர்நிலை இலக்கணம்
பற்றிப் புறனடை கூறுகின்றது.
 

பொருள்: உயிரும் புள்ளியும் குற்றியலுகரமும் நின்று வருமொழியொடு
கூடி நடக்குமிடத்து, இவற்றின் புணர்நிலை இயல்பு இவை  எனக்    கூறிய
சொற்களின் பலவாறான நெறிகள் எல்லாம், அவற்றின் பொருண்மை சார்ந்த
வழக்கொடு    பொருந்திப்   புணரும்  நிலைமைக்கண் பிறவாறு ஒத்தவை
எல்லாம் உரியவாம்.
 

என்றது: கூறப்பெறாதுநின்ற இலக்கணத்தான்    சான்றோர்  வழக்காய்ப்
புணர்ந்து      நடக்கும்   இயல்பெல்லாம்   அறிந்து     மொழியியலுக்கு
மாறுபடாதவற்றை எல்லாம் புணரியல் நெறியாகக் கொள்க என்றவாறு.
 

அவற்றுள் சில வருமாறு :
 

துக்கொற்றா,  நொக்கொற்றா,   துந்நாகா,   துவ்வளவா  என ஓரெழுத்
தொருமொழிக்கண் மூவினமும் மிக்குவருதலும் கைம்மிகல்,மெய்ந்நிலை என
ஓரெழுத்தொருமொழி, ஈரெழுத்தொரு மொழிகளின்  கண்   மெல்லெழுத்து
மிக்கு வருதலும் உண்டு, வருது, உண்டீர்,உண்ப என்னும் வினைச் சொற்கள்
இயல்பாகப் புணர்தலும், ஐகார ஈற்று  வினைச்சொல் ஒல்லைக் கொண்டான்
- என மிக்குவருதலும்    மண்ணுகொற்றா  -      மண்ணுக்கொற்றா என
முதனிலைஏவல் உகரம் பெற்று   வன்கணத்தொடு   உறழ்ந்து   வருதலும்,
சாண்கோல் என்பது சாட்கோல்  என    அல்வழிக்கண்  திரிந்து வருதலும்
நம்பிக்    கொல்லன்,   செட்டிக்     கூத்தன்,    நங்கைப் பெண் எனப்
பண்புத்தொகைகள் அல்வழியுள் உயர்திணைப் பெயர்க்கண் மிக்குவருதலும்
பிறவுமாம்.