சூ. 172 : | பலரறி சொன்முன் யாவர் என்னும் |
| பெயரிடை வகரம் கெடுதலும் ஏனை |
| ஒன்றறி சொல்முன் யாதுஎன் வினாவிடை |
| ஒன்றிய வகரம் வருதலும் இரண்டும் |
| மருவின் பாத்தியின் திரியுமன் பயின்றே |
(30) |
க-து: | சில சொற்கள் திரிந்து மரூஉ முடிபாகி நிற்குமாறு கூறுகின்றது. |
பொருள்: உயர்திணைப் பல்லோரறியுஞ் சொல்முன் வரும் யாவர் என்னும் வினாப்பெயரின் இடையே உள்ள வகர உயிர்மெய் கெடுதலும், அஃறிணை ஒன்றறி சொல்முன் வரும் யாது என்னும் வினாப்பெயரின் இடையே ஒன்றிய வகர உயிர்மெய் தோன்றி வருதலும், ஆகிய இரண்டும் மரூஉ மொழிகளின் பாங்காகிப் பயின்று திரியும். |
எ-டு: அவர் யார், மாந்தர் யார், அந்தணர் யார் எனவும் அது யாவது எனவும் வரும். இவை இரண்டும் இலக்கணத்தொடு பொருந்திய மரூஉவாகும். |
யாவர் என்னும் வினாப்பெயரின் மரூஉவாகிய ‘யார்’ என்பதற்கும் வினாவினைக் குறிப்புச்சொல்லாகிய ‘யார்’ என்பதற்கும் வேற்றுமை யாதெனின்? இம்மரூஉப் பெயர் பல்லோரறியும் சொல்லைச் சார்ந்து வரும். உருபேற்கும். வினைக்குறிப்புச் சொல் ஆடூஉ, மகடூஉ,பல்லோரறியும் சொல் மூன்றன் பின்னரும் வினாப்பயனிலையாக வரும். உருபேலாது. |
‘ஒன்றியவகரம்’ என்றதனான் ‘‘யாவதும் உணரார்’ என நிலைமொழியாக வருமிடத்தும் வகரம் பெறுதலும், ‘‘திரியுமன்’’ என்றதனான் திரியாது இயல்பாய் வருதலும் ‘பயின்று’ என்றதனான் யாவர் அவர் என நிலைமொழியாக நிற்றலும் கொள்க. இன்னும் அதனானே இலக்கண நெறியான் வரும் மரூஉச் சொற்களை எல்லாம் இதுவே நிலைக் களனாகக் கொண்டு அமைத்துக் கொள்க. |
தொகைமரபு முற்றியது. |