பல்லவை நுதலிய அகர இறுபெயர்
வற்றொடு சிவணல் எச்ச மின்றே
ஒருசார் அகர ஈற்றுப் பெயர்களுக்குச் சிறப்புவிதி கூறுகின்றது.
பொருள்: பன்மைப் பொருளைச் சுட்டிவரும் அகர ஈற்றுப் பெயர்களின்முன்வரும் உருபு, வற்றென்னும் சாரியையொடு பொருந்தி வருதல்ஒழிதலின்று. ஏகாரம் ஈற்றசை.
எ-டு: பல்லவற்றை, பல்லவற்றொடு, பல்லவற்றுக்கு, பல்லவற்றின்,பல்லவற்றது, பல்லவற்றுக்கண் எனவரும். பல, சில, உள, உள்ள, பிறஎன்பவற்றொடும், உண்ப, தின்ப, கரிய, பெரிய, பொன்னன்னஎன்பவற்றொடும் இவ்வாறே ஒட்டிக் கண்டுகொள்க.
‘‘பல்லவை” என உடம்பொடு புணர்த்திக் கூறினமையின் சிறுபான்மைசாரியை இன்றி வருதலும் கொள்க. ‘‘எச்சமின்று ’’ என்பதனான்பலவற்றிற்கு, பலவற்றின்கண் என நான்கும் ஏழும் வற்றொடு இன்சாரியைபெற்று ஒருங்கு வருதலும் கொள்க. இனி வருவனவற்றிற்கும் ஈதொக்கும்.