சூ. 176 :

சுட்டுமுதல் உகரம் அன்னொடு சிவணி

ஒட்டிய மெய்யொழித்து உகரங் கெடுமே

(4)
 
க-து:

உருபு வருங்கால் நிலைமொழி உகரஈற்றுச் சுட்டுப்பெயர்  எய்தும்
முறைமை கூறுகின்றது.
 

பொருள்: சுட்டெழுத்துக்களை  முதலாக உடைய உகர ஈற்றுச் சுட்டுப்
பெயர்களின் உகரம், உருபுவருங்கால்   அன்   சாரியையொடு பொருந்தித்
தான்ஊர்ந்து நின்றமெய் எழுத்துக்கெடுதலைத் தவிர்த்துத்     தான்மட்டும்
கெடும்.
 

மெய்    ஒழித்து    என்றது  கெடுதலினின்றும் அம்மெய்யினை நீக்கி
என்றவாறு. எனவே, மெய் கெடாது நிற்கும் என்பதாயிற்று. எ-டு: அதனை,
அதனொடு, அதற்கு, அதனின், அதனது, அதன்கண் எனவரும். இது,  உது
என்பனவற்றொடும்     இவ்வாறே    ஒட்டிக்     கொள்க.   இவ் உகரம்
முற்றுகரமாதலின் கேடு கூறினார். சாரியைப்    புணர்ச்சியாதலின்   தகரம்
இரட்டாதாயிற்று.    உகர   ஈற்றுச் சுட்டுப் பெயர்களின் முன்வரும் உருபு
அன்சாரியையொடு பொருந்திவரும் என்பது கருத்து.
 

இனி, நச்சினார்க்கினியர் ‘‘ஒட்டிய’’   என்றதனான்    பிற  உகரஈறும்
உயிர்வருவழிக் கெடுவன கொள்க எனக் கூறிக் கதவு, களவு,  கனவு, நிலவு
என்பனவற்று உகரம் கதவழகிது, களவியல், கனவெழுத்தது என்றாற்போலக்
கெடும் என்றார்.
 

இவ்விளக்கம்   ஈண்டைக்கு   இயையாமையொடு மொழியமைப்பினை
ஓர்ந்துணராமல் வரையப்பட்டதாகும். இதனைப் பவணந்தியார்   ‘முற்றுமற்
றொரோவழி’ என விதிப்படுத்தினார். வேங்கடராசுலு  ரெட்டியார்   இவை
குற்றுகரமாகக் கொள்ளத்தகும் என்பார்.
 

களவு, கனவு,   செலவு,    நிலவு,   புறவு முதலாக வரும் உகர ஈற்றுச்
சொற்கள்    இயல்பீற்றன   அல்ல. அவை   உடம்படுமெய் பெற்று வந்த
சாரியை உகரமும் தொழிற்பெயர் விகுதியும் ஆகார ஈறு குறுகிய  உகரமும்
ஆகிய விதியீறுகளாம். அவ்உகரம் வருமொழியாக உயிர்  வந்த   விடத்து
உடம்படுமெய்யை நிறுத்தித் தான்கெடும் என்பதும்,    பிறவும்      எனது
குற்றியலுகர ஆய்வுக்கட்டுரையுள் கண்டு கொள்க.  இவற்றின் இயல்பீறு கத,
கள, கனா, செல், நிலா, புறா என்பனவாம்.