சூ. 177 :

சுட்டு முதலாகிய ஐயென் இறுதி

வற்றொடு சிவணி நிற்றலும் உரித்தே

(5)
 
க-து:

உருபுவருமிடத்து  ஐகார ஈற்றுச் சுட்டுப்பெயர் சாரியை பெறுமாறு
கூறுகின்றது.
 

பொருள்: சுட்டெழுத்தினை முதலாக உடைய ஐகார ஈற்றுச் சொல்லின்
இறுதி, உருபு வருங்கால் வற்றென்னும் சாரியையொடும் பொருந்தி நிற்றற்கு
உரித்தாகும்.
 

எ-டு: அவையற்றை,   இவையற்றை,   உவையற்றை  எனவரும். பிற
உருபுகளொடும்  ஒட்டிக் கொள்க.   வற்றினது   வகரக்கேடு   புணரியலுட்
கூறப்பட்டது. வகரமெய் கெட்டவிடத்து யகரம் உடம்படு மெய்யாக வந்தது.
 

‘நிற்றலும்’ என்னும்  உம்மையை  வற்றொடும் எனக் கூட்டுக. அதனான்
பிறவற்றொடும்    நிற்றற்குரித்தெனக்   கொள்க.   எ-டு:   அவைதம்மை,
அவைதம்மொடு   எனத்   தம்முச்சாரியையொடு   வரும்.    சிறுபான்மை
வற்றொடு இன் சாரியை ஒருங்கு பெறுதலும் கொள்க. எ-டு: அவையற்றிற்கு
எனவரும்.