நீயென்னும் ஓரெழுத்தொருமொழியொடு உருபு புணருமாறு கூறுகின்றது.
பொருள்: நீ என்னும் ஓரெழுத்துப் பெயராகிய நெட்டெழுத்துத் தனது மாத்திரை குறுகி நிற்கும். அவ்விடத்து ஒரு னகரப் புள்ளி தோன்றி நிற்கும்.
மொழிக்கு அடிப்படையாகலின் எழுத்தினை முதல் என்றார். நீ என்னும் முதனிலைத் தொழிலை நீக்க ஒருபெயர் என்றார்.ஆகும் என்பது தோன்றும் என்னும் பொருட்டாய் நின்றது. குறுகுவது பெயர் அன்று. எழுத்தே என்பது உணர நெடுமுதல் குறுகும் என்றார். அங்ஙனம் தோன்றிய ஒற்றொடு உருபு பொருந்திப்புணரும் என்பது கருத்து.