சூ. 181 :

அஆ என்னும் மரப்பெயர்க் கிளவிக்கு

அத்தொடும் சிவணும் ஏழ னுருபே

(9)
 
க-து:

அகர  ஆகார  ஈற்று மரப்பெயர்க்கு முன்வரும் ஏழனுருப்பிற்குச்
சிறப்பு விதி கூறுகின்றது.
 

பொருள்: அகரம்   ஆகாரம் என்னும் எழுத்துக்களை ஈறாக உடைய
மரப்பெயர்ச்   சொற்களுக்கு  முன்வரும் ஏழனுருபு இன் சாரியையேயன்றி
அத்துச்சாரியையொடும் பொருந்தி வரும்.
 

எ-டு: விளத்துக்கண்,   பலாவத்துக்கண்  எனவரும்.  ‘‘அத்தி னகரம்
அகரமுனை    இல்லை’’    என்றதனான்   விளத்துக்கண்  என நின்றது.
விளவத்துக்கண் எனக்காட்டித் “தெற்றென் றற்றே” (புணரியல் - 31) என்ற
மிகையான் அகரம் கெடாது நின்றது என்பார்   நச்சினார்க்கினியர்.