சூ. 183 :

சுட்டுமுதல் வகரம் ஐயும் மெய்யும்

கெட்ட இறுதி இயல்திரி பின்றே

(11)
 
க-து:

வகர   ஈற்றுச்    சுட்டுப்    பெயர்க்குமுன் சாரியை பெறுமாறு
கூறுகின்றது.
 

பொருள்: சுட்டெழுத்தினை முதலாக உடைய வகர ஈற்றுச் சொல்முன்
உருபு வருங்கால்,   யாவை   என்னும்  சொல்லிற்கு ஓதிய இலக்கணத்தின்
திரிபின்றி வரும். அஃதாவது வற்றுச்சாரியை பெறும் என்றவாறு.
 

யாவை   என்னும்   சொல்லொடு மாட்டேற்றிக் கூறுதல் விளங்க ஐயும்
மெய்யும் கெட்ட இறுதி என்றார்.
 

எ-டு: அவற்றை,  இவற்றை,  உவற்றை எனவரும். ஏனைய உருபொடும்
ஒட்டிக் கொள்க. நிலைமொழி வகரக்கேடு ‘‘அத்தே வற்றே’’  (புணரியல்-31)
என்பதனாற் கூறப்பட்டது.